பக்கம் எண் :

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 242

புதுக் கவிதைக்கு நிலையான ஒரு இடம் உண்டா? என்று ஒரு குறிப்பிட்ட பேராசிரியர்
என்னிடம் கேட்டார்.

     ‘புதுக் கவிதையின் எதிர்க்காலத்தைப் பற்றி உறுதி கூறுவதற்கு, நான் புதுக் கவிதை
பற்றிய சோதிடம் எதுவும் கணிக்க முற்படவில்லை. அது காலம் முடிவுக்கட்டக் கூடிய ஒரு
விஷயம். ஆனாலும், புதுக்கவிதையின் வரலாற்று அடிப்படையில் தெளிவாகிற ஒரு
உண்மையைச் சொல்லலாம். 1930களில் சோதனை முயற்சியாக இரண்டு பேரால் தொடங்கப்
பெற்ற ‘வசனகவிதை’ 1940களில் வலுப்பெற்று வளர்ந்தது. நாற்பதுகளின் கடைசிக்
கட்டத்தில் ஒரு தேக்கம் ஏற்பட்டது. தமிழுக்குப் புதுசான வசன கவிதை முயற்சி
செத்தொழிந்தது என்று, அதை எதிர்த்தவர்கள் சந்தோஷப்பட்டார்கள். ஆனால், 1960களில்
‘எழுத்து’ பத்திரிக்கையின் வளர்ச்சியோடு புதுக்கவிதையும் புத்துயிர் பெற்றது. அது வேக
வளர்ச்சி பெறும் வகையில் திறமையாளர்கள் பலர் படைப்பு முயற்சியில் ஈடுபட்டு வெற்றி
கண்டுள்ளனர். அதன் பிறகும் புதுக் கவிதைக்குப் பெரும் ஆதரவும் கவனிப்பும்
கிட்டியுள்ளன. மரபுக் கவிதைகளில் சொல்ல முடியாததை- அல்லது மரபுக் கவிதையில்
சொல்ல முடிகிறதைவிட அழகாகவும் நயமாகவும் சுதந்திரமாகவும் தங்கள் எண்ணங்களை -
புதுக்கவிதை மூலம் வெளியிட முடியும் என்ற உணர்வு மரபுக் கவிதை எழுதி வந்தவர்களில்
பலருக்கு ஏற்பட்டுள்ளது. மரபுக் கவிதை எழுதிப் பெயர் பெற்ற அநேகர் அதை ஒதுக்கி
விட்டு ‘புதுக்கவிதை எழுதி வெற்றிகண்டிருக்கிறார்கள். பல பெயர்களை இதற்கு
உதாரணமாகச் சொல்லமுடியும். புதுக்கவிதையின் வரலாறு இவ்வாறு இருக்கிறபோது, அதன்
எதிர்காலம் குறித்து அவநம்பிக்கை கொள்ள வேண்டிய அவசியம் எதுவுமே இல்லை என்று
நான் கருதுகிறேன்.’ இது எனது பதில்.

     இந்தத் தகவலே இவ்வரலாற்றுக்கு சரியான முடிவுரை ஆகும் என்று எனக்குத்
தோன்றுகிறது.