எழுபதுகளின் பிற்பகுதியில் | 1972 நவம்பர் முதல் ‘தீபம்’ இதழில் பிரசுரமாகி வந்த ‘புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்’ என்னும் இக்குட்டுரைத் தொடர் 1975 மே மாதம் நிறைவு பெற்றது. அப்போது இருந்த நிலைமைகளை ‘39’ ஆம் பகுதி கூறுகிறது. அதற்குப் பிற்பட்ட விஷயங்களை இங்கே கவனிக்கலாம். ஒருமுறை நின்று போய், மீண்டும் தோன்றிய ‘கசடதபற’ ஒரு சில இதழ்களோடு தன் வாழ்க்கையை முடித்துக் கொண்டது. புதுக்கவிதைக்கு ஆதரவு அளித்துக் கொண்டிருந்த சதங்கை, பிரக்ஞை, தெறிகள், நீலக்குயில் முதலிய ஏடுகளும் நின்று போயின. தங்கள் படைப்புகளை வெளியிடுவதற்குப் பத்திரிக்கைக்கள் இல்லாமல் போனதாலும், தங்கள் சாதனைகளை வாசக உலகத்துக்குத் தெரியப்படுத்தும் முறையிலும், கவிஞர்கள் அவரவர் கவிதைகளைத் தொகுத்து வெளியிடும் முயற்சியில் ஆர்வம் காட்டலானார்கள். இதனால், அதுவரை வெவ்வேறு ஏடுகளில் பிரசுரமாகியிருந்த கவிதைகளும், பத்திரிக்கைகளில் இடம் பெற்றிராத புதிய படைப்புகளும் தொகுதிகளாக வெளிவந்தன. 1973ல் 10 புதுக்கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. 1974ல் 16 தொகுதிகள் பிரசுரமாயின. 1975ல் நான்கும், 1976ல் மூன்றும், 1977ல் ஏழு தொகுப்புக்களும், 1978ல் 14 தொகுதிகளும் வந்துள்ளன. 1979ல் 14 தொகுதிகள் இது ஏகதேசமான கணக்குதான். கணக்கெடுப்பில் விடுபட்டுப் போன தொகுப்புகள் சில இருக்கவும் கூடும். இவ்வாறு வெளிவந்த புதுக்கவிதைத் தொகுப்புகளில், சமூகப் பார்வையோடு எழுதியவர்களின் படைப்புகள்தான் அதிகம் உள்ளன. தனி மனிதனின் உணர்ச்சிகள், அகநோக்கு, வாழ்க்கை தரிசனம், நித்தியமான உண்மைகள் முதலியன பற்றி எல்லாம் கவிதைகள் எழுதியவர்களின் தொகுப்புகள் அவ்வளவு அதிகமாக இல்லை. பிந்திய ரகக் கவிஞர்களின் எழுத்துக்களை வெளியிடுவதில் குமரி மாவட்டத்திலிருந்து பிரசுரமாகும் காலாண்டு இலக்கிய ஏடு ‘கொல்லிப்பாவை’ ஆர்வம் காட்டியது. 1978ல் சென்னை- திருவல்லிக்கேணியிலிருந்து ‘ழ’ எனும் கவிதை ஏடு வரத் தொடங்கியது. ஆத்மாநாம் ஆசிரியர், ஆர். ராஜகோபாலன் இணை ஆசிரியர், ஞானக்கூத்தனின் புதிய படைப்புகளும், சோதனை முயற்சிகளும் இதழ் தோறும் இடம் பெற்றுள்ளன. மொழி பெயர்ப்புகளும் வருகின்றன. ‘தமிழ்க் கவிதையின் ஆழத்தையும் அகலத்தையும் பரப்பிக் காட்டும் - காட்ட வேண்டும்... புதிய பேனாவுடன் புதிய குரலும் ஒலிக்க வேண்டும்’ என்ற நோக்குடன் செயல்படுகிற ‘ழ’ வில் புதுமையான படைப்புகள் காணப்படுகின்றன. | | |
|
|