அகற்றிப் பார்க்கும் பார்வையின் யதார்த்த வெளியீடே உண்மையான கவித்வ மொழி மரபை ஏற்படுத்தும்”. தமிழவன் கூறும் இக்கருத்து கவிதை எழுதுவோரின் கவனத்துக்கு உரியதாகும். மற்றொரு புத்தகம்: ஆ, செகந்நாதன் எழுதிய ‘புதுக்கவிதை- திறனாய்வு (1978). இது புதுக் கவிதையின் பூரணமான திறனாய்வு அல்ல. சமூகப் பிரக்ஞையோடு கவிதை எழுதியுள்ள முற்போக்குக் கவிஞர்களின் படைப்புகள் மட்டுமே இதில் ஆய்வு செய்யப் பட்டுள்ளன. அதை விருப்பு வெறுப்பற்ற முறையில் ஆசிரியர் செய்துள்ளார். “தமிழ் இலக்கியத் துறையில் புதிய மாற்றங்களை உருவாக்கியுள்ள புதுக் கவிதை யுக மாற்றத்துக்கு வழி வகுக்கும் போர்க் கருவியாகவும் பயன்பட வேண்டும்- பயன்படும் - என்ற நம்பிக்கையோடு, புதுக் கவிதையை வரவேற்கிறோம்” என்ற முடிவுரையோடு தனது ஆய்வை முடிக்கிறார். ஆ. செகந்நாதன். புதுக்கவிதை பற்றிய முழுமையான திறனாய்வு அவசியத் தேவையாகும். புதுக் கவிதைக்குப் பெரும் அளவில் வரவேற்பு இருப்பது போலவே, எதிர்ப்பும் பரவலாக இருந்து வருகிறது. எதிர்ப்பு பற்றி புவியரசு எழுதியுள்ள ஒரு கருத்து குறிப்பிடத்தக்கதாகும். ‘வானம்பாடி’ பதினைந்தாவது இதழில் ‘புதுக்கவிதையின் புதிய நெருக்கடி’ என்ற தலைப்பில் அவர் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் ஒரு பகுதி- “கவிதை பல்வேறு தளைகளிலிருந்து விடுதலை பெறப்பெற - புதிய பல்வேறு துறைகளின் உண்மைகளைப் புலப்படுத்தும் ஆற்றலைப் பெறத் தொடங்கிவிடுகிறது. முன்னெப்போதும் கவிதை வட்டத்திற்குள் வந்திராத பல உள்ளடக்கங்கள். இன்றைய கவிதையில் இருப்பதன் காரணம் இதுதான். “உணர்ச்சி நிலைக்கு மட்டும் பயன்படும் மற்றக் கலைகள் பின்னே தங்கி நிற்க, பாட்டுக் கலை அவற்றிலிருந்து விடுதலை பெற்று மனிதனுக்குத் தோழனாய் முன்னேறுகிறது. “இத்தகைய நுண்மையான - உயர்வான - மேல்மட்ட வளர்ச்சி, கல்வியறிவில் மேம்பட்ட சமூகத்தில்தான் வெற்றி பெறுவது சாத்தியமாகும். பழைமையில் ஊறிக் கிடக்கும். எதிரே பார்க்க மறுக்கும், விழிப்புணர்ச்சி எளிதில் பெறாத சமூகத்தில் கவிதையின் இப்புதிய வடிவம், தன்னை நிறுத்திக் கொள்ள மிகப் பெரிய போராட்ட மொன்று - ஜீவ மரணப் போராட்டமொன்று - நடத்தியே தீரவேண்டியிருக்கிறது. “செவிக்குப் புலப்படும் ‘ரிதம்’மைப் புறக்கணித்துவிட்டு, மனதிற்கு இதமாகும் கருத்து வழிபட்ட ‘ரிதம்’ மில்லயிப்பது அறிவு மேம்படாத சமுதாயத்தில் சாத்தியமில்லை. “புதுக் கவிதையின் திணறலுக்கு இது ஒரு முக்கிய காரணம். தமிழாசிரியர்களின், புதுக்கவிதை மீதான எதிர்ப்புக்குக் காரணம் அவர்களின் மொழிப் பற்றோ, இலக்கியப் பற்றோ அல்ல; பழமைப் பற்றே காரணம். | | |
|
|