பக்கம் எண் :

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 246

     பழமை வடிவங்களில் ஊறிப் போன பழைமை மனம், உணர்வுகளைச் சற்றே தள்ளி
வைத்து, அறிவு பூர்வமான கலை வடிவங்களை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. அவர்கள்
மனம் கடந்த காலத்தில் வாழ்வதே இதற்குக் காரணம்.

     புதுக்கவிதை படைப்பாளிகளில் முக்கியமானவர்களும் ரசிகர்களும் மரபுக்கவிதை
அழிந்துவிட வேண்டும் என்றோ - புதுக்கவிதை மட்டுமே வாழ்ந்து வளரவேண்டும்
என்றோ சொல்லவில்லை.

     நல்ல கவிதைகளை நாடுகிறவர்கள் இரண்டு வகைக் கவிதைகளையும் வரவேற்று
ரசித்து மகிழத் தயாராக இருக்கிறார்கள். மரபுக் கவிதை மூலம் தங்கள் ஆற்றலை
புலப்படுத்த விரும்புவோர் அத்துறையில் அரிய சாதனைகளைப் புரிந்து காட்டுவதை யார்
தடுக்கிறார்கள்? மரபுக் கவிதை வாதிகள் அப்படி புதுமைகளையும் அரிய சாதனைகளையும்
புரியக் காணோம்.

     முன்பு கவிதைகள் எழுதித் தங்கள் ஆற்றலைக் காட்டிய கவிஞர் பலர்
இப்போதெல்லாம் கவிதை எழுதுவதேயில்லை. புதிது புதிதாக அநேகர் எழுதுகிறார்கள்.
அநேகரது படைப்புகளில் எளிமையும் இனிமையும் பார்வை வீச்சும் காணப்படுகின்றன.
அபூர்வமாகப் சிலபேரிடம் சுயத்தன்மையும், வார்த்தை வனப்பும், உருவகச் செறிவும்,
கருத்து நயமும், புதுமைப் பொலிவும் காணக்கிடக்கின்றன.

     இத்தகைய எழுத்துக்கள் புதுக்கவிதையின் வளமான எதிர் காலத்துக்கு நம்பிக்கை
தருகின்றன.