ஒரு விளக்கம் | ‘புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற இந்த நூல் புதுக்கவிதையின் வளர்ச்சி பற்றிய முழுமையான ஆராய்ச்சியாக அமையவில்லை. இந் நூற்றாண்டின் அறுபதுகள் வரையிலான புதுக்கவிதை முயற்சிகளையே இது கவனிப்புக்கு உரியதாகக் கொண்டுள்ளது. அதில் கூட சில குறைபாடுகள் உண்டு என்பதை நான் உணர்ந்துள்ளேன். இந்நூலின் இரண்டாம் பதிப்பு வெளிவந்த சமயத்திலேயே கவிஞர்கள் இன்குலாப், அப்துல் ரகுமான், வைரமுத்து போன்றோரின் படைப்புகள் சரியானபடி ஆய்வு செய்யப்படவில்லை என்பது ரசிகர்களால் என் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது உண்டு. இக்கவிஞர்களும் பிறரும் எழுபதுகளிலும் பின்னரும் பல சாதனைகள் புரிந்திருக்கிறார்கள். புவியரசு தன் போக்கினை மாற்றி ‘மீறல்’ என்ற தலைப்பில் புதுமையான கவிதைகள் படைத்துள்ளார். சிற்பி, மு.மேத்தா, ஞானக்கூத்தன் முதலியோரும் அவரவர் திறமையை நிரூபிக்கும் விதத்தில் அநேக தொகுதிகள் வெளியிட்டிருக்கிறார்கள். ஈழக்கவிஞர்கள் பலரது தொகுப்புகள் தெரியவந்திருக்கின்றன. எழுபதுகளிலும் எண்பதுகளிலும் புதுக்கவிதைத் தொகுப்புகள் அதிகமாகவே பிரசுரம் பெற்றுள்ளன. புதுக்கவிதை முயற்சியில் ஈடுபட்ட பலப்பல இளைஞர்கள் உற்சாகமாகத் தங்கள்கவிதைகளைத் தொகுத்து அழகு அழகான புத்தகங்களை வெளியிட்டிருக்கிறார்கள். புதுக்கவிதையில் நீண்ட படைப்புகளை உருவாக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப் பட்டிருக்கின்றன. அத்தகைய முயற்சியாக வைரமுத்து படைத்தளித்த ‘கவிராஜன் கதை’ என்கிற மகாகவி பாரதியின் வரலாறு கவனிப்புக்கு உரியதாகும். கலாப்ரியாவின் ‘எட்டயபுரம்’ தனிரகமானது. கதை சார்ந்த-வாழ்க்கை நிகழ்வுகளையும் மனிதர் இயல்புகளையும் நினைவு கூர்கிற - பாடல்களாக பழமலய் கவிதைகள் எழுதி, ஒரு புதிய தடம் அமைத்துள்ளார். அவரது ‘சனங்களின் கதை’ பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, ‘குரோட்டன்சுடன் கொஞ்சநேரம்’ என்ற கவிதைகளைப் படைத்து அவர் சாதனை புரிந்திருக்கிறார். வான்முகில் ஒரு தனி வகையில் கவிதைகள் இயற்றியுள்ளார். ‘தார்ப்பாலை’ என்ற அவரது தொகுதி விஷேமானது. கலாப்ரியாவின் ‘சுயம்வரம்’ என்பதும் முக்கியமானதாகும். சங்க காலப் பாடல்களை - புறநானூறு, அகநானூறு போன்றவற்றை - புதுக் ்கவிதைகளாக எளிமைப்படுத்தித் தரும் முயற்சிகளும் நடைபெற்றுள்ளன. இவ்வகையில் வெற்றிப்பேரொளி பாராட்டப் பட வேண்டிய விதத்தில் கவிதை படைத்துவருகிறார். | | |
|
|