| புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 248 |
இப்படி எத்தனையோ விஷயங்கள் கவனிப்புக்கும் விமர்சனத்துக்கும் உள்ளாக்கப்பட வேண்டியனவாகும். ஒவ்வொரு கவிஞரையும் ஆய்வுசெய்யும் தனித்தனி நூல்கள் இன்னும் எழுதப்படவில்லை. ஆய்வு மாணவர்களும் புதிய விமர்சகர்களும் இத்தகைய விமர்சன முயற்சிகளில் ஈடுபட்டு இக்குறையைப் போக்க வேண்டியது அவசியம் ஆகும். எழுபதுகளிலும் பின்னரும், மொத்தமான புதுக்கவிதைத் தொகுப்புகள் வெளிவந்திருப்பதையும் குறிப்பிட வேண்டும். இவற்றில் ‘கணையாழி கவிதைகள்’, ‘ழ’ கவிதைகள் ஆகியவை முக்கியமானவை. புதுக்கவிதையை - அதன் தன்மைகளை ஆய்வு செய்யும் நூல்களும் அநேகம் வந்துள்ளன. எனினும், அதை ஆழ்ந்தும் முழுமையாகவும், நேர்மையான விமர்சன உணர்வோடு ஆய்வு செய்யும் முயற்சிகள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை. திறமையாளர்கள் இவ்வகை முயற்சியிலும் ஈடுபட வேண்டும். எழுபதுகளிலும் எண்பதுகளிலும் வந்த புதுக்கவிதையின் நோக்கையும் போக்கையும் விமர்சனம் செய்யும் முறையில் இலக்கு, முன்றில் கருத்தரங்குகளில் கட்டுரைகள் படிக்கப்பட்டு, அவை தொகுப்பு நூலிலும், சிறு பத்திரிக்கைகளிலும் பிரசுரமும் பெற்றுள்ளன. இவை புதுக்கவிதை பற்றிப் பேசவும் விமர்சிக்கவும் உதவி புரிந்தன. எனினும் இவை முழுமையான ஆய்வுகளாக அமையவில்லை என்றே சொல்லவேண்டும். புதுக்கவிதையின் வளர்ச்சிக்கு சிறு பத்திரிகைகள் தொடர்ந்து துணை புரிந்துள்ளன. எழுத்து, கசடதபற வழிக்கவிதை முயற்சிகளும், வானம்பாடி வழிக்கவிதைகளும் அதிகம் அதிகமாகவே இப் பத்திரிக்கைகளில் இடம் பெற்றுள்ளன, மீட்சி, விருட்சம், காலச்சுவடு, கனவு போன்ற இதழ்களின் பங்களிப்பு கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும். ‘கவி’ காலாண்டிதழ், அதன் பிறப்பு முதல், கவிதை வளர்ச்சிக்கு நற்பணி ஆற்றி வருகிறது. கவிதைக்கு என்று எண்ணற்ற சிறுபத்திரிகைகள் தோன்றின. பலமறைந்தும் போயின. ஆனாலும் இவற்றால் புதுக்கவிதை நல்ல பலனைப் பெற்றதில்லை. காரணம், இந்த விதமான பத்திரிக்கைகள் கவிதை என்ற பெயரில் எது எதையோ அச்சிட்டுப் பக்கங்களை நிரப்புகின்றனவே தவிர, தரமான கவிதைகள் தோன்றுவதற்குத் தளம் அமைத்துத்தர வேண்டும் என்ற முறையில் செயல்படுவதில்லை. பெரும்பாலான பத்திரிக்கைகளின் ஆசிரியர்களும், அவற்றில் கவிதை எழுதுகிறவர்களும் ‘கவிதை உணர்வு’ - கவிதை ஞானம் - என்பது சிறிதளவு கூட பெற்றிருக்கவில்லை. கவிதை எழுத வேண்டும் என்கிற ஆர்வம் இருக்கிறது பலருக்கும். நல்ல கவிதை எழுதுவதற்குத் தேவையான பயிற்சியோ உளப்பக்குவமோ அவர்களுக்கு இல்லை. இடைக்காலத்தில், அதிக விற்பனை உள்ள வணிகநோக்குப் பத்திரிக்கைகளும் புதுக்கவிதைகளை வெளியிடுவதில் உற்சாகம் | | |
|
|