பக்கம் எண் :

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 42

  விடியற்காலை விடுதலையில் வளர்கிறது-
செயல் செய்யும் தேவையில்,
கண் கண்டதற்கு மேல் ஓடுகிறது கனவு,
பாதையெல்லாம் பூரிக்கிறது பேரவா-
யௌவனம் மாறுகிறவரை
பிறகு வருகிறது யோசனை,

கரும வெற்றிகளில் பிறந்த களிப்பு,
உற்பத்தி செய்வதிலிருக்கும் உள்ள நெகிழ்ச்சி,
அரை குறையற்றதின் அழகு,

நிறைவின் நிம்மதி,
மண்ணின் மற்றெல்லா மகிழ்ச்சிகள்-
மாலை வரை!
இருண்டதும்,
மனிதன் மறுபடியும் பிரயாணமாகிறான் தன் வழியே-
அமைதியாக.

 
     வாழ்வின் இனிமைகளை ரசித்து மகிழ வேண்டும் என்று கருதி இன்பங்களை வியந்து
போற்றுவதில் கு.ப.ரா. ஆர்வம் கொண்டிருந்தார் என்பதை அவர் எழுத்துக்கள் கூறும்.
அவரது வாழ்க்கைத் தத்துவத்தைப் பிரகடனப்படுத்துவது போல் அமைந்துள்ளது
‘நண்பனுக்கு’ என்ற கவிதை.
 

 
ஓயாமல் எண்ணியும் பேசியும்,
சளைத்துப்போய் விட்டோம், அல்லவா?
வார்த்தையை வைத்து வாதாடி
வீண் வித்தியாசம் கொண்டோம். போதும்!

மாயையும் தத்துவமும் என்ன
     என்று தெரியவே வேண்டாம்;
கண்கண்ட சுகத்தைக் கடைந்து
     உண்போம், இனிமேல், வா!

இவ் வாழ்க்கை நதி வரண்டு
     மணலாகும் மரணம் வரை
அதன் கரைபுரளும் வெற்றியை
     ஒப்புக்கொள்வோம், அதனாலென்ன?

உயிரின் இன்ப ஊழியத்தில்
     அடிமைகளாவோம். பாதகமில்லை!
ஆத்மா, பரமாத்மா-இந்தப் பேச்சு-
     யுகம் யுகமாக, காது துளைத்துப் போச்சு!

அது வேண்டாம் நமக்கு!
     மதுக்கிண்ணத்தைப் பற்றிப் பேசினானே
அவன் யார்?-உமர்கயாம் -
     அவனைத் தொடர்வோம். அப்பா!