பக்கம் எண் :

45  வல்லிக்கண்ணன்

புத்தபக்தி

 
     ‘பிக்ஷு’வின் கவிதைகளால் வசீகரிக்கப்பட்டு, நானும் கவிதைகள் எழுதலானேன்-1942
முதல், 1943ல் நான் ‘சினிமா உலகம்’ என்ற மாதம் இருமுறைப் பத்திரிகையின் துணை
ஆசிரியர் ஆனதும், எனது கவிதைகள் அதில் அவ்வப்போது அச்சாயின. அந்த சமயத்தில்
நாட்டியக்காரி, ஆடும் அழகி, கலை, சினிமா போன்றவையே என் கவிதைப் பொருள்கள்
ஆயின.

     அவ்வருடத்தின் இறுதியில் நான் சென்னை சேர்ந்து, ‘நவசக்தி’ மாசிகையில்
பணிசெய்ய முற்பட்டேன். திரு.வி.க. வாரப் பத்திரிகையாக நடத்தி வந்த ‘நவசக்தி’யை
சக்திதாசன் சுப்பிரமணியனிடம் கொடுத்து விட்டார். சக்திதாசன் அதை இலக்கிய மாத
இதழாக நடத்திக் கொண்டிருந்தார். கே. ராமநாதன் அதன் துணை ஆசிரியர். அவர்
கம்யூனிஸ்ட். ‘முற்போக்கு இலக்கியவாதி’. ‘நவசக்தி’யை ‘முற்போக்கு இலக்கிய இதழ்’
ஆகக்கொண்டு வருவதில் மிகுந்த உற்சாகம் காட்டி வந்தார். அந்த சந்தர்ப்பத்தில்தான்
நானும் போய்ச் சேர்ந்தேன்.

     அது யுத்த காலம், ஜப்பானியரையும், பாசிஸ வெறியையும் எதிர்த்து கவிதைகள்,
கதைகள், கட்டுரைகள் உருவாகிக் கொண்டிருந்த காலம். கவி ரவீந்தநாத் தாகூர்
ஜப்பானியரின் பலாத்காரத்தை வெறுத்தும், கண்டித்தும், எழுதிக் கொண்டிருந்தார்.
ஜப்பானியர்கள் யுத்தம் மூலம் ஆசிய நாடுகளில் நாசத்தை விதைத்து வந்தபோதே, தங்கள்
முயற்சியில் வெற்றி பெற வேண்டும் என்று புத்தர் ஆலயத்தில் பூஜைகள் நடத்தினார்கள்
என்றொரு செய்தி வந்தது, அதைக்கண்ட தாகூர், ‘மிருக வெறியைப் பரப்புகிற ஜப்பானியர்
புத்தருக்கு பக்தி செலுத்துகிறார்களாம்’ என்று குத்தலாகச் சுட்டிக்காட்டி ‘புத்த பக்தி’ என்ற
கவிதையை எழுதினார். அதையும் ஆஸ்திரேலியத் தொழிலாளி வர்க்கக் கவிதை
ஒன்றையும் தமிழாக்கி ‘நவசக்தி’ யில் வெளியிட விரும்பினார் கே.ராமநாதன். அவ்வாறே
செய்தேன்.
 
  உறுமின முரசுகள்
வெறி கொண்ட மக்கள்
கோர உரு ஏற்று
பற்களைக் கடித்தனர்;
சாவுக் கோட்டையில்
மனித ஊன் சேர்க்கும்
துடிப்புடன் ஓடும் முன்
கூடி நிற்கின்றார்
புத்தன் முன்னிலே,
கருணை வள்ளலின்
ஆசிகள் வேண்டியே: