பாரதிக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட வசன கவிதை முயற்சிகள் பாரதி காட்டிய வழியில் செல்லவில்லை; பாரதியின் ‘காட்சிகள்’ போல் அவை அமையவில்லை என்று கவிஞர் திருலோக சீதாராம் கருதினார். எனவே, ‘பாரதியின் அடிச்சுவட்டில், ‘காட்சிகள்’ என்ற படைப்பு முயற்சியை நாமும் தொடர்ந்து செய்வோமே; நாம் இருவரும் அத்தகைய படைப்புக்களை உருவாக்குவோம்’ என்று அவர் என்னிடம் சொன்னார். ‘இரட்டையர்’ என்று நாங்கள் இருவரும் எழுதத் தீர்மானித்தோம். ‘பாரதி அடிச்சுவட்டிலே’ என்பதுதான் அதற்குத் தலைப்பு. அதற்கு ஒரு முன்னுரை ‘கிராம ஊழியன்’ 16-6-1944 இதழில் பிரசுரிக்கப்பட்டது. அதில் சில முக்கியமான பகுதிகள்: ‘பாரதியின் ரசிகர்கள் நாங்கள். கலைஞனின் சிருஷ்டிகளைப் படித்து ரசிப்பது மட்டுமே எங்கள் தொழில் அல்ல. அவைகளைப் போற்றுவதுடன் நிற்பது எங்களுக்கு திருப்தி தராது. ஒரு கலைஞனின் ஆசைகளும், கனவுகளும் அவனுடன் முடிந்து விடாமல், அவன் சிந்தனைச் சரம் தொடர்பற்று விடாமல் அவனது புதுமைப்பாதை வெறும் பாலை நடுவே கலந்து, இருந்த இடம் தெரியாது மங்கிவிடாமல் காப்பதும் ரசிகர்கள் கடமை. இலக்கியக் குலத்திலே பாரதி பரம்பரையில் வந்தவர்கள் நாங்கள். எங்கள் சகோதரர்கள் செய்துவரும் முயற்சிகளை நாங்கள் கவனித்து வந்தோம். கவனிக்கிறோம். எங்களுக்கு முந்திய தலைமுறையினரும், பிறரும் செய்யாத காரியங்கள் பல பாரதி இலக்கிய சரித்திரத்தில் செய்யப்பட வேண்டும் என்று நாங்கள் உணர்கிறோம். இதுவரை எல்லோரும் பாரதியின் கவிதைகளைப் பின்பற்றியுள்ளனர். வசனத்தையும் பின்பற்றியிருக்கிறார்கள். ஆனால் பாரதி கையாண்ட புது முயற்சியை யாரும் தொடர்ந்து செய்யவில்லை. நன்கு ஆராயக் கூட இல்லை. அதுதான் பாரதியாரின் ‘காட்சிகள்’. மகுடி நாகத்து இசை போன்றதுதான் பாரதியின் புது முயற்சியான ‘காட்சிகள், பொருள் நிறைந்த சிறிய சிறிய வாக்கியங்களை அடுக்கிக் கொண்டு போவது, மகுடி நாதத்திலே ஒலிக்கும் வாது போலவே பாரதியின் எழுத்துக்களிலும் ஒரு வேகம் துள்ளுகிறது, கவிதை யாவும் தனக்கெனக்கேட்ட பராசக்தியின் புகழ் பாட பாரதி எனும் பாணன் கையாண்ட சொல் கருவியிலே பற்பல தோற்றம் சிருஷ்டிக்க முயன்றதன் விளைவுதான் ‘காட்சிகள்’. ‘பாட்டினிலின்பமும் கற்பனை விந்தையும் ஊட்டியெங்கும் உவகை பெருகிட ஓங்குமின்’ கவி ஓதிய பாரதியார், “பொருந்தாத பொருள்களைப் பொருத்தி இசைத்த ஜாலம் தான் ‘காட்சிகள்’ ஜகத்சித்திரம் முதலியன என்பதும் எங்கள் கருத்து. பாரதி சென்ற சுவட்டிலே நாங்களும் துணிந்து அடியெடுத்து வைக்க முன்வந்து விட்டோம். |