| 					  | 										அழகை வியக்கலாம், வர்ணிக்கலாம், விளக்க முடியாது. 					 					அழகு ஒரு கலை, அதுவே தத்துவம், 					அழகே சக்தி, அதுவே சிவம், 					அழகைப் போற்றுகிறேன், துதிக்கிறேன், வணங்குகிறேன், 					அது வாழ்க. 					 					அழகு அழிவற்றது என்று மனம் பேசியது 					குபுக்கென்று சிரித்தது மலர், 					அழகாய் அரும்பி, எழில் மிக்க போதாகி, வனப்பாய் மிளிர்கிறது  					மலர். 					 					அழகின் களஞ்சியம், 					காலையில் மலர்ந்தது, மாலையில் சோர்ந்தது, மறுநாள் வாடி  					விழுந்தது. 					செடி ‘பாரடா அழகின் தன்மை!” என்றது. 					அழகு மாறுதலற்றது என்றேன். 					 					களுக்கெனச் சிரித்தாள் மங்கை. கண்களில் கவிதை பேசியது.  					முறுவலில் காந்தம் சுடரிட்டது கதுப்பிலே கதை சுவை 					காட்டியது. கரும் பட்டுக் கூந்தலில், சங்குக்கழுத்தில் 					மார்புமொட்டுகளில், ஏன்-அவள் மேனி முழுவதும்-அழகு 					சிரித்தது முன்பு. 					 					இன்றோ? 					 					மலரின் வாட்டம் அவள் உடலில் உறக்கம் காட்டியது. 					‘விழித்து உணராத மூடனே, அழகின் வாழ்வை நேரில் பார்’ என்றது 					அவள் உருவம், தலை குனிந்தேன். 					அழகு மூப்பற்றது. வளர வளர வனப்புறுவது என்று உள்ளம்  					பேசியது. 					 					குழந்தை சிரித்தது, கிழவனைச் சுட்டியது, 					குழந்தையின் சிரிப்பில் மின்மினிக் கண்களில், தளிர் நடையில், 					மழலை மொழியில், எழில் விளையாடியது. குழந்தை வளர்ந்தால், 					பெரியவன் ஆனால், கிழவனாகிடில்...? 					 					எங்கே அழகின் சக்தி? 					நரை, திரை பிணி மூப்பு, சாவு 					போதும், போதும்! 					 					அழகு அழிவுறுவது, சோர்வது, வாடுவது, வதங்குவது, திரிவது,  					பிரிந்து மாறுவது, மண்ணாவது. 					 					‘நிறுத்தடா பித்தனே! என்றது வானம், என்னைப்பார். என் 					எழிலைப் பார் என்றது கடல். 					 					விழித்து நோக்கடா விந்தைக் காட்சியை என்றது அந்தி. 					தூக்கக் கண்களை துடைத்துப் பாரடா என்றது உதயம். 					என்னைப் பார்க்க வெள்ளெழுத்தா என்றது மலை. | 				 				 			 | 		 	   |   
				
				 | 
				 
			 
			 |