கிராம ஊழியனில் | | ‘பாரதி அடிச்சுவட்டில்’ என்ற தலைப்பில் பாரதியின் ‘காட்சிகள்’ போன்ற வசன கவிதைகள் தொடர்ந்து எழுதுவது; முதலில் ஒரு பொருளைப் பற்றி நான் எழுத வேண்டும்; அடுத்து அதை வெட்டியும் ஒட்டியும் அவர் எழுதுவது என்று திருலோக சீதாராம் யோசனை கூறினார். ஆயினும், அழகு பற்றி நான் எழுதிய பின்னர், அதைத் தொடர்ந்து வெட்டியோ அல்லது ஒட்டியோ, எழுதுவதில் அவர் ஆர்வம் கொள்ளவில்லை. என்னையே தொடர்ந்து எழுதும்படி சொல்லி விட்டார். ஆகவே, பாரதி அடிச்சுவட்டில் நான் மட்டுமே முன்னேற நேர்ந்தது. ‘இளவல்’ என்ற பெயரில், அழகு, திங்கள், அந்தி, வானம், மழை பற்றி எழுதினேன். அடுத்து, ‘ஜகத்சித்திரம்’ மூன்று இதழ்களில் வந்தன. அவை ரசிகர்களின் பாராட்டுக்களை மிகுதியும் பெற்றுத் தந்தன. அதே சமயம் குறை கூறல்களையும், கண்டனங்களையும் எழுப்பின. சாந்தி, ஒலி, காலம், கனவு, மனம், இன்பம், சிந்தனை ஆகியன பற்றியும் ‘காட்சிகள்’ முறையில் வசன கவிதைகள் எழுதினேன். அவை பிரசுரமாகிக் கொண்டிருந்த சமயத்திலேயே வேறு பலரகமான வசனகவிதைகளையும் நான் கிராம ஊழியனில் எழுதி வந்தேன். தமிழின்-தமிழ் இலக்கியத்தின் பாதுகாவலர்கள் தாங்களேதான் என்று சொல்லிக் கொண்டிருந்த பலரும் என்னையும், ‘கிராம ஊழியன்’ போக்கையும் ஏசுவதில் உற்சாகம் கண்டார்கள். இலக்கியத்துடனும், கவிதையோடும் தொடர்பே இல்லாத-என்றாலும் தமிழை வளர்ப்பதே தங்கள் கட்சிதான் என்று பெருமை பேசிக் கொண்ட--அரசியல் கட்சியின் பிரசங்கிகள், மேடைகளிலும், அவர்கள் நடத்திய பத்திரிகைகளிலும் என்னைக் குறை கூறியும் தாக்கியும் மகிழ்ந்து போனார்கள் நான் தமிழைக் கொலை செய்து கொண்டிருக்கிறேன் என்று குற்றம் சாட்டி. பிச்சமூர்த்தி அடிக்கடி கவிதைகள் எழுதி உதவினார். திருலோக சீதாராமும், கு.ப. ராஜகோபாலனும் தயாரித்த ‘கிராம ஊழியன்’ பொங்கல் மலரில் (ஜனவரி 1944) பிக்ஷுவின் ‘மழை அரசி’ எனும் புதுமையான, அருமையான, காவியம் பிரசுரமாயிற்று. அந்த மலரில் தான் புதுமைப்பித்தன், வேளூர் வெ.கந்தசாமிபிள்ளை என்ற பெயரில் தனது முதல் கவிதையை வெளியிட்டார். | | “கடவுளுக்குக் கண்ணுண்டு கண்ணோ, நெருப்பு வைக்க; தலையில் பிறையுண்டு- தணல் கையில் உண்டுண்டு” | | |
|
|