பக்கம் எண் :

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 6

     பற்றி வரலாற்று ரீதியாக புத்தகம் ஏதாவது இருக்கா என்பது எனக்கு சந்தேகமே.
பாரதிக்கு முன், பாரதிக்குப்பின் என்று கூட புதுவிதக் கவிதைகளின் தோற்றம் வளர்ச்சி
பற்றி புத்தகங்களே இல்லையே. ஆராய்ச்சி அந்தப் பார்வையில் ஏதாவது
செய்யப்பட்டிருக்கிறதா என்பதும் எனக்கு கேள்வி. கவிதை போகட்டும்; சிறுகதை, நாவல்
பற்றிக் கூட அத்தகைய சரியான புத்தகம் வரவில்லை.
 
     இந்த நிலையில் தமிழ் இலக்கியத்துக்கு சமீபத்தில் சேர்ந்த புதுக்கவிதை பற்றிய
வல்லிகண்ணன் புத்தகத்தை ஒரு சாதனை என்றே சொல்ல வேண்டும். முப்பத்தைந்து
ஆண்டுகளுக்கு மேலாக எழுதிவரும் வல்லிக்கண்ணன் ஏராளமாக எழுதுபவர். இலக்கிய
உருவங்களில் அவர் தொடாத துறை கிடையாது. போதுமான, நியாயமான அளவு
வாழ்க்கைவசதி கூட எழுத்தாள வாழ்க்கை மூலம் அவருக்கு கிடைக்க வராத நிலையிலும்
அவரது ஆழ்ந்த இலக்கிய ஈடுபாடும் செயலீடும் தனித்துக் குறிப்பிடத்தக்கது. ஒரு முனகல்
இல்லாமல் வாழ்க்கைச் சவாலை ஏற்றுக்கொண்டு, எழுத்தே குறிப்பாக செயல்படும் அவரை
தமிழ்நாடு தக்கபடி பயன்படுத்திக் கொள்ளவில்லைதான். இருந்தும் அவரது தளராத பங்கு
செலுத்தல்கணிசமானது. தன்னை விமர்சகர் என்று சொல்லிக் கொள்ளாமல் இலக்கிய ரசிகன்
என்ற அளவிலேயே தன் அபிப்பிராயங்களை வெளிப்படுத்திக் கொண்டு வருகிறவர் அவர்.
எந்த இலக்கியப் புத்தகங்கள் படித்தாலும் தான் அதை ரசித்ததை உடனே
வெளிச்சொல்பவர் அவர். படைப்பாளி, இலக்கிய ரசிகன் என்பதோடு அவர் ஒரு
இலக்கியத் தகவல் களஞ்சியம். இந்த நாற்பத்தைம்பது வருஷ இலக்கிய உலகத்
தகவல்களோ போக்குகளோ, புள்ளி விபரமோ, புத்தகபட்டியலோ, அவற்றின்
உள்ளடக்கமோ, அவரிடம் கேட்டால் ரெடிமேடாக கிடைக்கும். தவிர வெளியே எங்கும்
கிடைக்காத தற்கால இலக்கிய நூல்களும் பத்திரிகைகளும் அவரிடம் கிடைக்கும்
செல்லப்பாவிடம் கேட்டால் கிடைக்கும் என்று தகவல் கொடுக்கப்பட்டு என்னிடம்
தகவல்கள் கேட்க வருபவர்களிடம் வல்லிக்கண்ணனிடம் தான் போக வேண்டும் என்பேன்
நான். அவர் தேடித் தந்திராவிட்டால் பிச்சமூர்த்தி கவிதைகள் சில கிடைத்திராது.
 
     இதையெல்லாம் சொல்லக் காரணம் இந்த புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்
நூலை எழுத அவருக்கு உள்ள தகுதியை தெரியப்படுத்தத்தான். இந்த புத்தகத்தை
அவரைத் தவிர வேறு யாரும் இவ்வளவு முறையாக எழுதி இருக்கு முடியாது நிச்சயமாய்.
தற்கால புதுக்கவிதை இயக்கத்தோடு வளர்ந்திருந்த எனக்கே வியப்பு. இந்தக் கட்டுரைத்
தொடரை நான் ‘தீபம்’ பத்திரிகையில் படித்து வந்தபோது, எனக்குத் தெரியவராத பல
தகவல்கள், கட்டுரை விஷயங்கள், சிலகருத்துக்கள் எனக்கு முதன்முதலாக தெரியவந்தன.
தீபம் பத்திரிகை ஆசிரியர் நா. பார்த்தசாரதிக்கு என் நன்றியை தெரிவித்தாகவேண்டும்
இந்த இடத்தில். இலக்கிய உபயோகமான காரியமாக, அவர் தன் பத்திரிகையில் பி.எஸ்.
ராமையாவை ‘மணிக்கொடி காலம்’ எழுதச் செய்து விட்டு பிறகு வல்லிக்கண்ணனை
‘சரஸ்வதி காலம்’ எழுதவும் பயன்படுத்தி, தொடர்ந்து வல்லிக்கண்ணனை புதுக்கவிதை
பற்றிய வரலாற்று நூலை எழுத வைத்தது ஒரு முக்கிய நிகழ்ச்சி. அவருக்கு