பக்கம் எண் :

7  வல்லிக்கண்ணன்

இந்த யோசனையும் அக்கறையும் தோன்றி இராவிட்டால் இந்த நூல் பிறந்தே இருக்காது.
வேறு யார், எந்த பத்திரிகை இதை செய்திருக்கக் கூடும்?
 
     இந்த நூலைப்பற்றி நான் இன்னும் பேசவில்லை. பேசப் போவதும் இல்லை. இதன்
பக்கங்களே வாசகர்களுடன் பேசும். இது எனக்கு மன நிறைவு தந்த நூல். ஒரு இலக்கிய
வரலாற்று நூலை எழுத தகவல் அறிவு பெரும் அளவுக்கு இருக்கவேண்டும். அது இந்த
நூல் மூலம் தெரிகிறது. ஆனால் தகவல் அறிவு மட்டும் போதாது. பொறுப்புணர்ச்சி இருக்க
வேண்டும். விருப்பு, வெறுப்பு, மனச்சாய்வு, கொள்கை சார்பு இருக்கவே கூடாது. நான்
இந்த வரலாற்று நூலை எழுதி இருந்தால் என்னை அறிந்தும் அறியாமலும் ஒரு பக்கமாக
அழுத்தம் கொடுத்திருக்கக் கூடும். ஆனால் வல்லிக்கண்ணனோ தான் புதுக்கவிதை
ஆராம்பகர்த்தாக்களில் ஒருவராக இருந்தும் படைப்பில் தன் போக்கு என்று
கொண்டிருந்தும் அந்த ‘தான்’ னை ஒதுக்கிவிட்டு புதுக்கவிதை முதல் இன்று வரை உள்ள
படைப்புகளுக்கும் போக்குகளுக்கும் கொள்கைகளுக்கும் கிளை இயக்கங்களுக்கும்
படைப்பாளிகளுக்கும் சரித்திரநியாயம் கிடைக்கச் செய்திருக்கிறார். தனக்கு உடன்பாடாக
இருப்பதை அளவு கடந்து மெச்சியும் தனக்கு ஏற்காததை மறைத்தோ
அலட்சியப்படுத்தியோ இகழ்ந்தும் எழுதவே இல்லை. ஒரு இலக்கிய சரித்திர ஆசிரியரால்
இலக்கிய மாணவர்களுக்குச் சரியாக தரப்பட்ட புதுக்கவிதை இயக்க முதல் நூல். இதை
எழுதி இருப்பதுக்கு, ஒரு இலக்கிய கடமையை பொறுப்புடனும் நேர்மையாகவும்
மனப்பூர்வமாகவும் சரியாகவும் நிறைவேற்றி இருப்பதுக்கு நாம் வல்லிக்கண்ணனைப்
பாராட்ட கடமைப் பட்டிருக்கிறோம். புதுக்கவிதை பற்றிய ஒரு ‘ஆதான்டிக்’
ஆதாரபூர்வமான புத்தகத்தை, இந்த அஸ்திவாரத்தின் மீது புதுக்கவிதை ஆராய்ச்சி செய்ய
வழி செய்யும் இந்த புத்தகத்தை, அவரே முடிவுரையாக ‘இது வரலாறு மட்டுமே இதை
அடிப்படையாக வைத்துக் கொண்டு புதுக்கவிதைகளையும் கவிஞர்களையும் நன்கு
விமர்சிக்கும், ஆழமும் கனமும் கொண்ட ஆய்வுரைகள் வரவேண்டும்’ என்று சொல்வது
போல, திறனாய்வுக்கு ஆதார ஆகாரம் தரும் இந்த புத்தகத்தை எழுத்து பிரசுரம்
வெளியீடாக கொண்டு வருவதிலே எனக்குள் ஏற்பட்டிருக்கும் திருப்தியும் மகிழ்ச்சியும்
எனக்குத்தான் தெரியும்.
 
27-4-77
சென்னை
  சி.சு.செல்லப்பா