பக்கம் எண் :

71  வல்லிக்கண்ணன்

  அன்பே சிவமாவான்
மங்கலமாய் மலர் தருவான்;
வேண்டுவோர் வாரீர்
வாங்குவோர் கூடீர்!

     என்ற குரல் மீண்டும் மீண்டும் ஒலிக்கும்படி செய்கிறார்; ஒலித்துக் கொண்டே
இருக்கும் என்று உறுதி கூறுகிறார்:

     ‘எஃகிறகின் உயரம், தெய்வக்குரல் ஏறவில்லை’ என்றாலும் என்ன!
 
  ‘நெஞ்சுடையாக் கனவுத் தெய்வம்
கூவுதலைக் குறைக்கவில்லை
அன்பே சிவமாவான்
மங்கலமாய் மலர் தருவான்...

என்று நம்பிக்கை வெளிச்சம் தரமுயன்றிருக்கிறார் கவிஞர்.

     இன்பமும் துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை. துன்பத்தில் சலிப்புற்ற மனம்
இன்பத்துக்கு ஏங்குவது இயல்பு. அப்படி ஆசைப்பட்டு இன்பத்தை நாடுகிறபோது அது
துன்பத்தை எதிர்பாராதவகையில் அழைத்து வந்து விடுகிறதே! இந்த உண்மையை
வர்ணிக்கிறது ‘எமனுக்கு அழைப்பா!’ என்ற கவிதை.

     வெப்பத்தில் வெம்பி வதங்கிய கவி ஈரத்திற்கேங்கி வருணனை வேண்டினார்.
 
  கருணை பிறந்தது:
மழை முகில் மிதந்தது.
நெஞ்சத்தில் குளுமையின்
ஊற்றுக்கண் வழிந்தது,
அனல்பட்ட அறையினில்
தளிர் முகம் கண்டது.
 
     இன்பம்தான். கூடவே, எறும்புப் பட்டாளம் புகுந்தது. பாச்சைகளும் பல்லிகளும்
வந்தன. ஈசல்கள் பறந்தன. பல்லிகள் ஈசல்களைப் பிடித்துத் தின்றன. கவியின் சிந்தனை
விழித்துக் கொள்கிறது இப்போது-
 
  சித்தத்தில் தூண்டில்முள்
சுருக்கென்று தைத்தது,
ஈரத்திற் கேங்கினால்
எமனுக்கு அழைப்பா!
இன்பத்தை நாடினால்
துன்பத்தின் அணைப்பா?
 
      பிச்சமூர்த்தியின் இயற்கை வர்ணனைகளும், அவர் கையாளும் உவமைகளும்
புதுமையாய் நயமாய் மிளிர்வன என்பதை அவரது சிறுகதைகளைப் படித்தவர்கள்
உணர்ந்திருப்பர். இச்சிறப்புக்களை அவருடைய கவிதைகளிலும் காணமுடிகிறது.