பக்கம் எண் :

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 72

  ‘சித்திரைச் சூரியன்
செஞ்சூலம் பாய்ச்சலால்
ஆற்று மணல் வெள்ளம்
அனலாகக் காய்ந்தது,
பத்தரை மாற்றுச் சொர்ணப்
பொடி போல ரவி
ஏற்ற மணல் காடு
அங்கங்கே மின்னிற்று.
‘மின்னல்கள் சிரித்து
மேகத்தைக் கொளுத்தின;
கூதலெனும் நாகம்
குடையோடு சீறிற்று.’

     ‘பேணாது பொங்கிய கவிஞன் கனவைப் போல், எழில் மண்டித் தூங்கும் விரிசடை
மரங்கள். நாணாத பச்சைக் கை நீண்டு பரவல் போல் வானப் பகைப்புல சித்திர மூங்கில்.’

     ‘பல்லற்ற பாம்பைப் போல நெளிந்து வரும் நல்நெருப்பு. சூல் கொண்ட யானையைப்
போல் அசைந்தாடும் அலைகள்.’

     ‘காலையின் கதவுகள், கிழக்கில் திறக்கவும், ஒளியாற்றில், செம்மேக மாதுகள்
குளித்தனர்’- இத்தகைய இனிய உவமைகளையும் உருவகங்களையும் பிக்ஷுவின் கவிதைகளில் மிகுதியாகவே காணலாம்.

     மழைக்கால இனிமைகள், அழகுகள் பற்றிய பலரகமான வர்ணனைகள் அவரது
கவிதைகளில் உண்டு என்று குறிப்பிட்டிருக்கிறேன். ‘வேட்கை’ என்ற கவிதையில் இப்படி
ஒரு படப்பிடிப்பு-
 
  மழைநாளின் இருட்கால்
விளையாடும் வேளை
விந்தையாய் மரமெல்லாம்
வழியை மறித்தன.
மின்பாயும் வானமும்
வெளியு மெல்லாம்
காட்டேறி ஊர்வலத்தைக்
காட்டும் நேரம்.

     ஒளிவேண்டும் என்று வேட்கை கொள்ளும் சில மனநிலைகளை அழகாகக் கூறும்
கவிதையில் இவ்வர்ணனை வருகிறது.

     வாழ்க்கையின் துன்பங்கள், மங்கு பொன் மாலை; நாட்களின் நோய்கள்.
தெறித்தோடும் நேரம். செல்வரும், ஏழைகளும் சினிமா பார்ப்பதில் இன்புற்றிருக்கும்
வேளை. திடீரென்று படம் அறுந்து போகிறது. அப்படி இருளடையும் போது மக்கள் தழல்
வீசக் கூவுகிறார். ‘அட! போடுங்கள் வெளிச்சம்! போடுங்கள் வெளிச்சம்!’

     மழை இருட்டில், உழைப்பு முடிந்து வீடுவரும் பெண்கள், புன்னிருளால் வழி
விழுங்கப்பட்டிருப்பது கண்டு அல்லலுறுகிறார்கள்.