பக்கம் எண் :

73  வல்லிக்கண்ணன்

பாதையைப் பாம்புபோல் அறியும் கால்கள், அடி அடியாய் முன்னேற அவர்கள் வெருண்டு
சொல்வது; ‘நொடி நேரம் வெளிச்சம், வழிகாட்ட வேண்டும்; வழிகாட்ட வேண்டும்.’

     சீக்கின்றி காக்கை போல் திரிந்து, எஃகைப் போல் தசையுடன் உழைத்து, கால்
கஞ்சிக்கு வழிதேடி வாழ்ந்து வந்த ஏழை, கண்ணொளி இழந்து குருடானான். கடவுளை
எண்ணிக் கதறுகிறான்; ‘கண்போன பின்னர் உயிர் மட்டும் எதற்கு?’ சுற்றத்தின் சுமையைத்
தாங்க; ஒளி பின்னும் ஈவாய். அன்றேல் உயிரின்று கொள்வாய்.’
 
வெய்யிலின் செதில்கள் போல்
மான் புள்ளி காணுது,
வேலியில் சட்டைபோல்
கொக்குகள் தோணுது.
ஓயில்நடை
போடுது வாலாட்டிக் குருவி
சோலையை உருக்குது
கருங்குயில் வீணை
மலைக்குகை மூலையில்
வாயைப் பிளக்குது.

இச்சூழலில் விலையற்ற ஒளியும், பருவத்தின் இனிப்பும், உள்ளத்தைத் தொட்டு
உணர்வெழுப்பும் மலரும் பிறவும் அர்த்தமற்றனவாய் தோன்றுகின்றன பற்றற்ற யோகிக்கு.
அவனுடைய வேட்கை, அமுதொளி அடைவது என்றோ? என்பதுதான்.

     இனிமை, எளிமை, உணர்வு, ஓட்டம், அழகு, கருத்தாழம் ஆகியவை நிறைந்த
கவிதைகள் பல இயற்றி வெற்றி கண்ட பிச்சமூர்த்தி நீண்ட கவிதைகள் (சிறுகாவியம்)
படைக்கும் சோதனை முயற்சியில் ஈடுபட்டார். கதையை அடிப்படையாகக் கொண்டு
தீட்டப்பட்ட இச்சொல் ஓவியங்களுக்கு அவர் பழைய நம்பிக்கைகள் அல்லது
கருத்துக்களையே கரு ஆக அமைத்துக் கொண்டிருக்கிறார்.

     மேகங்களைக் குடங்களில் பிடித்து சமைத்துச் சாப்பிடுகிறார்கள். மலை வாசிகள்
என்றொரு பழங்கதை மீது எழுந்தது; மழை அரசி காவியம், கருப்பொருள் எப்படி
இருப்பினும், அந்நெடுங்கவிதை அழகும் புதுமையும் கலந்து மிளிரும் இலக்கியப் படைப்பு
ஆக உருவாகியுள்ளது குறிப்பிடத் தகுந்தது.

     மழை இல்லை. குடியானவர்கள் வருந்துகிறார்கள்.
 
  பாழாகப் போச்சு மானம்,
கடவுளுக்குக் கண்ணைக் காணோம்,
வைத்த பயிர் வாழவில்லை
நட்ட விதை முட்டவில்லை
மல்லிகைப்பூ மலரவில்லை.
கிணற்றிலே சரளைக்கல்லு
குளத்திலே மண்ணுத்திட்டு.

இந்த நிலை மாறுவதற்காக பூசை முதலியன செய்தும் பயனில்லை.