பக்கம் எண் :

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 76

  கருப்புக்கொண்டல் வானை வளைத்து
வெளியைத் தழுவிக் கொஞ்சவே
இடிச்சதங்கை மனத்தைக் கவ்வ
அசைந்து ஆடிக் குலுங்கவே;
மின்னல் பெண்கள் பிடித்த கொடிகள்
வெளியில் ஒயிலாய்ப் பறக்கவே
வந்தது பார் மரகதத்தேர்
விழுந்தது பார் மழைத் துளி!
மாயத் தேரின் மேலடுக்கில்
வீற்றிருந்த மழை அரசி
புன்சிரிப்பை அள்ளிவிட்டாள்
பூர்ணிமையாள் போதை போல.
 
     கடலலைகள் நாணித் தலை குனிந்தன. நுரை மலரை மாலை கட்ட கடலுக்குள்
குனிந்தன. குடியானவர்கள் நெஞ்சத்தில் பால் ததும்பியது.

     கர்ண பரம்பரைக் கதைதான் என்றாலும் கவிஞரின் படைப்பாற்றலும், கற்பனை
வளமும், சொல்லாட்சியும் ‘மழை அரசி’ காவியத்துக்கு ஜீவனும் எழிலும் சேர்த்துள்ளன.

     ‘சாகாமருந்து’ என்ற நெடுங்கவிதையின் கருவும் பழமையான சிறு விஷயமே.

     மரணம் பற்றிப் பேசுகிறார்கள் சிலர். ‘மேகத்திலோர் வர்ணம், நீரிலோர் குமிழி,
காற்றிலோர் அசைப்பு, கனவிலோர் சிரிப்பு, வாழ்வு இதுவேயாகில், வாழவும் நாம்
வேண்டாம்’ என்கிறான் ஒருவன்.

     பொன்மலர்த் தேனில் சாகாமருந்து இருப்பதாகக் கனவு கண்டேன் என்று
வர்ணிக்கிறான் மற்றொருவன். அதை நாம் எப்படி அடைவது என்று ஜனங்கள் கேட்க,
அவன் கனவை மேலும் விளக்குகிறான். ஒரு ஞானி மட்டும் ‘வெளியிலே இல்லை; சென்னி
உச்சி நறுமலரில் அமுதம் உண்டு’ என்றார்.

     மலைமேல் தேடிச் சென்றவர்கள் சோமச் செடியைக் கண்டார்கள். சோமபானம்
செய்து பருகி மகிழ்ந்தார்கள். காடுகளில் தேடி அலைந்தவர்கள் அபினி, கஞ்சா, தென்னை
மரங்களின் கள் ஆகியவற்றைக் கண்டு களிப்புற்றார்கள்.

     ‘இவையே சாகா மருந்து. தவித்திடுதல் வேண்டாம் தாண்டி விட்டோம் காலம்’
என்றார்கள்.

     இருந்த இடத்திலேயே இருந்த ஞானி சொன்னார், நாளைக் காலையில் உண்மை
புரியும் என்று.

     மறுநாள் மயக்கம் தெளிந்தது. நாட்கள் ஓடின. வழக்கமான தொல்லைகள், சாவு
எல்லாம் இருந்தன. ஜனங்கள் அறிவு புகட்டி அஞ்ஞானம் அகற்றும்படி ஞானியை
வேண்டுகிறார்கள். அவர் வாழ்வின் இயல்பு பற்றிப் பேசுகிறார். அது மாந்தருக்குப்
பிடிக்கவில்லை. போதைப் பொருள்களை விரும்பி உண்கிறார்கள்.
 
  போதை உண்டால் நினைவு சாகும்,
நினைவு போனால் காலனேது?