பக்கம் எண் :

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 96

வெர்ஸ்’ பற்றிய சில வரிகளையும் சேர்த்துப் பார்த்தால் புதுக்கவிதை முயற்சி
செய்பவர்களது முறையான நோக்கு புலப்படும்.

     நடுவில் ஒரு வார்த்தை, வசன கவிதை என்ற பதச்சேர்க்கை பற்றி இந்த வார்த்தை
எப்படியோ உபயோகத்துக்கு வந்து விட்டது. இங்கிலிஷ் மொழியில் செய்யப்பட்ட ‘ஃப்ரி
வெர்ஸ்’ என்ற சொல்லின் அர்த்தமாக கருதப்பட்டு உபயோகிக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் வசனம் என்ற கவிதைக்கு மாறுபட்ட, ஒரு பதத்தை அதில் இணைந்திருப்பதால்
தெளிவான ஒரு பொருளுக்கு, வியாக்கியானத்துக்கு இடம் இல்லாமல் இருக்கிறது. இந்த
பதச்சேர்க்கையை முன் வைத்தே வாதப் பிரதி வாதங்கள் நடைபெறுகின்றன. வசன கவிதை
என்பது ‘கோவேறு கழுதை’, ‘விஜிடபிள் பிரியாணி’ என்று பரிகாசமாக பேசப்படுகிறது.
புதுக்கவிதை முயற்சி என்றால் அது வசன கவிதைதான், ‘யாப்புக்குப் புறம்பான’ வசனத்தை
ஒடித்துப்போட்டு எழுதுவதுதான்’ என்று முடிவு கட்டப்படுகிறது.

     புதுக்கவிதைகள் வசன கவிதைகளாகத்தான் இருக்கும் என்று கருதுவதற்கு இல்லை.
வசன கவிதைகள் எல்லாம் புதுக் கவிதைகள் என்று சொல்லி விடவும் முடியாது.
புதுக்கவிதைகள் உருவ அமைப்பில் மட்டுமல்ல; உள்ளடக்கம் சம்பந்தமாகவும் சில புதிய
இயல்புகளைப் பெற்றிருப்பதாகும். சோதனை கு.ப.ரா கூறியுள்ள அலங்கார அம்சங்களைப்
பொறுத்தது மட்டுமல்ல. ஒரு கலைஞனை உடன் நிகழ்கால வாழ்க்கை பாதித்து அவனை
உணர வைத்திருப்பது. வாழ்க்கையிலும் கலையிலும் மதிப்புத் தரநிலை தேடுவது இவைகள்
சம்பந்தமாகவும் உண்டு. எனவே வசனகவிதையையும் புதுக்கவிதையையும்
வித்தியாசப்படுத்திக் கொள்வதுதான் முறையானதாகும். குழப்பிக் கொண்டால் தற்காலக்
கவிதை சம்பந்தமாக ஒரு அபிப்பிராயம் விழுவதற்கு இடமே ஏற்படாது போய்விடும்.

     இதில் இன்னொரு விசேஷம். வசன கவிதைக்கான சில இலக்கண அம்சங்களை கூற
ஒருவர் முற்படும்போது புதுக் கவிதைக்கான சில நியதிகளையும் அதில் நாம் காண்கிறோம்.
கு.ப.ரா. வசன கவிதை பற்றி சொன்னாலும் புதுக்கவிதை பற்றிய விளக்கமாகவே அது
இருக்கிறது. பிச்சமூர்த்தியின் வாதத்திலும் சில புதுக்கவிதை சம்பந்தப்பட்டதாக
இருக்கின்றன. புதுக்கவிதை சம்பந்தமாக புதுமைப்பித்தன் கூறியுள்ள சில வரிகளைப்
பார்ப்போம்.

     ‘ரூபமில்லாமல் கவிதை இருக்காது. கவிதையுள்ளதெல்லாம் ரூபம் உள்ளதென்று
கொள்ளவேண்டும்... இன்று ரூபமற்ற கவிதையென சிலர் எழுதி வருவது இன்று
எவற்றையெல்லாம் ரூபம் எனப் பெரும்பாலோர் ஒப்புக் கொள்கிறார்களோ, அவற்றிற்குப்
புறம்பான ரூபத்தை அமைக்க முயலுகிறார்கள் எனக் கொள்ள வேண்டுமேயொழிய
அவர்கள் வசனத்தில் கவிதை எழுதுகிறார்கள் என்று நினைக்கக்கூடாது. அவர்கள்
எழுதுவது கவிதையா இல்லையா என்பது வேறு பிரச்னை.’

     இப்படி அவர் கூறும்போது மரபானவை என்று நாம் கருதி உள்ள உருவ வகைகளை
வைத்து புதுக்கவிதை முயற்சிகளை மதிப்பிடக் கூடாது என்று அவர் கருதுவதாகத்தான்
படுகிறது. அத்துடன் கவிதைக்கு உரிய (கு.ப.ரா. குறிப்பிட்ட அலங்காரங்களுடன் கூடிய)
கவிதைக்கு கரு, கருத்து இருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும்