எழுத்து 1960-61 கவிதைகள் |
‘எழுத்து’வின் இரண்டாவது ஆண்டு புதுக்கவிதையின் தரமான, வளமான, வளர்ச்சிக்கு வகை செய்தது. பிச்சமூர்த்தியின் கட்டுரையும், தலையங்கமாக வந்த செல்லப்பாவின் கருத்துக்களும் பல எதிரொலிகளைப் பெற்றன. அதே சமயத்தில், கவிதை உள்ளமும் கற்பனை வீச்சும் உணர்வோட்டமும் உடைய உற்சாகிகளைக் கவிதை எழுதத் தூண்டின. புதிய நோக்குடன் சிந்தனை விழிப்போடும் சோதனை ரீதியில் கவிதை எழுதும் உற்சாகத்தைச் சிலருக்குத் தந்தன. கவிதை பற்றிய கட்டுரைகளும் அதிகம் தோன்றின. கவிதைக் கலை பற்றி முருகையனும், கவிதை வளம் சுயேச்சா கவிதை பற்றி தருமசிவராமுவும் எழுதிய கட்டுரைகள் குறிப்பிடத் தகுந்தவை. ஆழ்ந்த சிந்தனையை வெளிப்படுத்தும் கனமான கட்டுரைகளை ‘எழுத்து’ வில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்த தரும சிவராமு 1960-ல் உணர்வு அனுபவங்களும் கற்பனை வளமும் நிறைந்த கவிதைகளை எழுத முற்பட்டார். அவருடைய முதல் கவிதை ‘நான்'-த.சி.ராமலிங்கம் என்ற பெயரில்-எழுத்து 13-வது ஏட்டில் பிரசுரமாயிற்று. |
| ஆரீன்றாள் என்னை? பாரீன்று பாரிடத்தே ஊரீன்று உயிர்க்குலத்தின் வேரீன்று வெறும் வெளியில் ஒன்று மற்ற பாழ்நிறைத்து உருளுகின்ற கோளமெல்லாம் அன்று பெற்று விட்டவளென் தாய்! |
இப்படிப் பிறந்து வளர்வது அக்கவிதை. தரும சிவராமுவின் இரண்டாவது கவிதை ‘பயிர்’ 23வது இதழில் வந்தது. அவருடைய கவித்துவத்துக்கு நல்லதோர் எடுத்துக்காட்டு அது. |
| வேலிகட்டா வானத்தில் வெள்ளிப் பயிர் வளர்க்க தாலிகட்டிச் சக்தியினை ஈர்ப்பென்ற நீர்பாய்ச்சிக் காலமெல்லாம் காத்திருக்க வைத்துவிட்டய்; வைத்துமென்ன? ஊழியென்ற பட்சி அவள் அயர்ந்திருக்கும் வேளையிலே வேலிகட்டா வானத்தில் வெள்ளி விதைகளெல்லாம் |