| சைவம் வைணவம் சமணமும் பவுத்தமும் தழைத்தது செழித்தது தமிழ்நாட்டில் வையகம் முழுவதும் வணங்கிடும் குணங்களால் வாழ்ந்தவர் உன்னுடை முன்னோர்கள். | (தமிழா!) |
| எங்கோ பிறந்தவர் புத்தர் பெருமைகள் ஏந்திப் பணிந்தவர்கள் தமிழ்நாட்டார் இங்கே அங்கே என்று அறிவுரைகளை என்றும் பிரித்ததில்லை தமிழ்நாட்டார் | (தமிழா!) |
| ஏசு தமிழரல்ல என்றிடும் காரணத்தால் இகழ்ந்து விடுவதில்லை தமிழ்நாட்டார் பேசும் தமிழர்களில் கிறிஸ்துவைப் போற்றுகின்ற பெருமையுடையவர்கள் பலபேர்கள். | (தமிழா!) |
| மகம்மது பிறந்தது மற்றொருதேசம் அவர் மகிமை விளங்குமிந்தத் தமிழ்நாட்டில் அகம்மகிழ்ந் தனுதினம் நாகூர் ஆண்டவனை ஆரார் தொழுகிறார் அறியாயோ. | (தமிழா!) |
| உலகின் மதங்களெல்லாம் ஒவ்வொரு காலத்திலே ஓடிப்புகுந்திந்தத் தமிழ்நாட்டில் கலகம் சிறிதுமின்றிக் கட்டியணைத் தவற்றைக் காத்து வளர்த்தவர்கள் தமிழ்நாட்டார். | (தமிழா!) |
| தன்னுயிர் நீப்பினும் பிறர்கொலை அஞ்சிடும் தருமம் வளர்த்தவர்கள் தமிழ்நாட்டார் மன்னுயிர் யாவையும் தன்னுயிர் என்றிடல் மண்டிக் கிடப்பதுன்றன் தமிழ்மொழியே. | (தமிழ!) |
| கொல்லாவிரதமே நல்லார் வழியென்று கூறி நடந்ததுன்றன் குலத்துமுன்னோர் எல்லா விதத்திலும் எவரும் மதிக்கத்தகும் ஏற்றமுடையதுன்றன் இல்லறமாம். | (தமிழா!) |