| என்னுடைப் பரத நாட்டின் இக்கொடி இந்தவாழ்வின் பின்னையும் அறிவு தேடும் பேரின்பம் தனையும் பேசும். பிறநாட்டுக் கொடிகளெல்லாம் பிறநாட்டைப் பிடிக்க எண்ணி மறம்நாட்டி மக்கள் தம்மைச் சண்டையில் மடியச் செய்யும், அறம்நாட்டி உலகையாண்ட அரியநம் கொடியோ மூன்று நிறம்காட்டி நிலையாயுள்ள நீதியே ஓத நிற்கும். பச்சையாம் நிறத்தினாலே பசுமையாம் அன்பை யூட்டும் நிச்சயம் வெள்ளை அந்த நிமலமாம் உண்மை நீட்டும் துச்சமிவ் வுலகமென்னும் துறவினைக் காவி சொல்லும் அச்சமில் குடிசைக் கூலி அதிலொரு ராட்டைக் காட்டும். தருமமே குறியாக் கொண்டு தனக்கென்று எதையும் வேண்டாக் கருமமே கடனென் றோதிக் கருணையின் வழியே காட்டி வருமமும் வஞ்சம் நீக்கும் வாழ்க்கையை வகுத்துப் பேசும் பெருமை நம் கொடியைப் போலப் பிறிதொரு கொடியும் உண்டோ! | | |
|
|