பக்கம் எண் :

தமிழன் இதயம்107

  
  சத்தியப் பாறையில் வேர்ஊன்றிய கொடி
சாந்தக் கோலின் உச்சியில் மணிமுடி
நித்திய மாகிய சுதந்தர வாழ்வினை
நித்தமும் நினைத்திட நின்றெமை ஆள்வது.
(கொடி)
 
சமரசம் காட்டிடும் துகிலினை வீசி
சச்சர வாறிடத் தென்றலிற் பேசி
அமைதியும் அன்புடன் அனைவரும் பொதுவாம்
அரசியல் நடத்திட அறிகுறி இதுவாம்.
(கொடி)
 
காற்றோடு பெருமழை கலந்தடித்தாலும்
கடுத்தவர் இருந்திடில் படையெடுத்தாலும்
போற்றி இக்கொடியினை உயிரெனக் காப்போம்
பூதலம் வியந்திடும் புகழொடு பூப்போம்.
(கொடி)
 
ஏழையும் செல்வனும் எனதென தென்றே
எல்லோ ரும்தொழ நடுவில் நின்றே
வாழிய வையகம் வாழ்ந்திட வேண்டி
வாழிய கொடியே! வாழ்க பல்லாண்டு.
(கொடி)

குடிப்பதைத் தடுப்போம்
 
  குடிப்பதைத் தடுப்பதே
     கோடி கோடி புண்ணியம்
அடிப்பினும் பொறுத்து நாம்
     அன்புகொண்டு வெல்லுவோம்
(குடி)
 

 

 
  மக்களை வதைத்திடும்
     மனைவியை உதைத்திடும்
துக்கமான கள்ளினைத்
     தொலைப்பதே துரைத்தனம்
(குடி)