விட்டது சனியன் |
| விட்டது சனியன் விட்டது சனியன் விட்டது நம்மை விட்டதடா கொட்டுக முரசு கொம்பெடுத்தூது கொடும் பாவி கள்ளைக் கொளுத்திவிட்டோம் | (விட்டது) |
| செத்தது கள்பேய் இத்தினம் இதையினி தீபாவளிபோல் கொண்டாடு பத்திரம் கள்மேல் சித்தம் வாராவிதம் பார்ப்பதும் காப்பதும் உன்பாரம் | (விட்டது) |
| ஈச்வர வருஷம் புரட்டாசியிலே இங்கிலீஷ் ஒன்று, பத்து முப்பத்தேழில் (1-10, ’37) சாச்வதம் போலவே நமைப் பிடித்தாட்டிய சனியன் கள்கடை சாத்திவிட்டார் | (விட்டது) |
| கூலியைத் தொலைப்பதும் தாலியை இழுப்பதும் கூசிட ஏசிடப் பேசுவதும் சாலையில் உருண்டொரு சவமெனக் கிடப்பதும் சந்தி சிரிப்பதும் இனியில்லை | (விட்டது) |
| அழுதிடும் மக்களும் தொழுதிடும் மனைவியும் ஐயோ! பசியுடன் காத்திருக்க பொழுதுக்கும் உழைத்தது முழுவதும் கூலியைப் போதையில் இழப்பதும் இனியில்லை | (விட்டது) |
| பெற்ற தன் குழந்தைகள் சுற்றி நடு நடுங்க பேயெனும் உருவொடு வாய்குளற உற்றவர் உறவினர் காறி உமிழ்ந்திட ஊரார் நகைப்பதும் ஒழிந்ததினி | (விட்டது) |