| | தூங்கித் தூங்கி விழும் தமிழா!-உன் தூக்கம் போக்க வந்தோம் தமிழா! ஏங்கிப் படுத்திருக்கும் தமிழா!-உன்னை எழுப்ப வந்தசக்தி தமிழா! | (தேச) |
| | எழுந்துநின்று கண்ணைத்துடைத்து-உன் இருகையாலும் கொடிபிடித்து அழுந்திக் கீழிருந்து வாடும்-அன்னை அடிமை நீக்க வழிதேடும். | (தேச) |
| | வெட்டி வெட்டி எறிந்தாலும்-மற்றும் வேறுஹிம்சை புரிந்தாலும் சுட்டி ரத்தம் சொரிந்தாலும்-நாங்கள் தூய்மை மாறிடோமே நாளும் | (தேச) |
| | சாந்த மூர்த்தியந்தக் காந்தி-சொன்ன சத்தியத் தையே ஏந்தி மாந்தர் யாருமினி உய்ய-உயர் மார்க்க போதனைகள் செய்ய | (தேச) |
| | தேவிசக்திதுணை கொண்டு-இந்தத் தேசம் சுற்றிவர வென்று கூவிக்கூவி எங்கள் தொண்டு-புரியக் குறைகள் தீருமினி நன்று | (தேச) |