| ஓடியிரைதேடி கிளியே உண்பது நீ மறந்தாய் நாடிப் பிறர்கொடுக்க கிளியே நாணமின்றிப் புசித்தாய் காட்டுப்பழவகையை கிளியே நாணுதல் நீ மறந்தாய் போட்டதை உண்டிருக்க கிளியே புந்திமகிழ்ந்தாயே சொந்தமொழிமறந்தாய் கிளியே சொன்னது சொல்லுகின்றாய் இந்த விதம் வாழும் கிளியே இன்பமுனக்கேது? உன்குலத்தைப் பழிக்க கிளியே உத்தரவானாலும் அங்கது செய்துயிரை கிளியே ஆசையுடன் வகித்தாய். எண்ணமுனக்கிருந்தால் கிளியே எத்தனை நேரமடி கண்ணைத் திறக்குமுன்னே கிளியே காட்சி சுதந்தரமாம். நல்லவழிசொல்லுவேன் கிளியே நாடித்தெரிந்துகொள்ளு அல்லல்வழிவிடுத்து கிளியே அன்பின் வழிதேடு. கூட்டை உடைத்துவர கிளியே கூடாதுன்னாலே சேட்டைவழிகளை நீ கிளியே செய்திடும் ஜாதியல்ல. சொன்னதைச் சொல்லாதே கிளியே சோறிட உண்ணாதே. என்ன அழைத்தாலும் கிளியே ஏனென்று கேளாதே. ரங்கா ரங்காவென்று கிளியே இங்கிதம் பேசாதே எங்கேஎங்கேஎன்று கிளியே ஏளனம் சொல்லாதே கொஞ்சிமகிழாதே கிளியே கெஞ்சிப் புகழாதே அஞ்சிநடுங்காதே கிளியே ஆடிநடிக்காதே. கொண்ட எஜமானன் கிளியே கோபித்துக் கொண்டாலும் அண்டிஉயிர்வாழ கிளியே ஆகாதென்று சொல்வாய். கொல்லுவனென்றாலும் கிளியே கொஞ்சமும் அஞ்சாதே மெல்லுவனென்றாலும் கிளியே மேனிநடுங்காதே. வெட்டுவன்என்றாலும் கிளியே வெற்றுரை என்றிருப்பாய் சுட்டிடவந்தாலும் கிளியே சோதனையென்றிருப்பாய். | | |
|
|