பக்கம் எண் :

118நாமக்கல் கவிஞர்

  
  சோதனைக் காலமடி கிளியே சோர்ந்திடுவாயோ நீ
வேதனையைப் பொறுத்தால் கிளியே வெற்றியுனதாகும்.

இந்தப்படி கிடக்க கிளியே இயலாதென்பதனை
உன்றன் எஜமானன் கிளியே உணரும்படி நடப்பாய்.

இப்படி நீ நடந்தாற் கிளியே எண்ணியெண்ணிப்பார்த்து
ஒப்பி எஜமானன் கிளியே யோசனை செய்வாண்டி.

காரியமுன்னாலே கிளியே காசளவில்லையென்று
வீரியம்பேசாமல் கிளியே விட்டிடுவானுனையே.

கோதிச்சிறகுலர்த்தி கிளியே கூசாமல் விரித்து
நாதன் புகழ்பாடி கிளியே நாற்றிசையும் பறப்பாய்.

நீண்டபெருவானம் கிளியே நீயதிலேபறந்து
ஆண்டவன் சன்னதியை கிளியே அண்டிச்சுகமடைவாய்
 

இந்தியத் தாயின் புலம்பல்
 
  காலக்கதியடியோ கைவிரித்து நான் புலம்ப
ஆலம்விதையெனவே அளவிறந்த மக்கள் பெற்றும்
ஞாலத்தில் என்னைப்போல் நலிந்தாளொருத்தியுண்டோ?
நீலக்கடலுலகில் நீடித்தும் பிள்ளைகளால்
கோலமிழந்துநிலை குலைந்துருகி வாடுகின்றேன்.

மெத்தப்பகட் டுடையாள் மேற்கத்திப் பெண்ணொருத்தி
 ‘அத்தை’யெனக்கூவி என்றன் ஆசாரவாசலிலே
தத்தித்தடுமாறித் தலைவணங்கி நின்றிருந்தாள்.
 ‘புத்தம்புதிய பெண்ணே போந்தகுறை என்னசொல்லு
சித்தங்கலங்காதே சின்னவளே’ என்று சொன்னேன்.