| வெள்ளைத் துகிலுடுத்து வெட்டிருந்தப் பட்டணிந்து கள்ளக்குறி சிறிதும் காட்டா முகத்தினளாய் அள்ளிச் செருகிவிட்ட அழகான கூந்தலுடன் பிள்ளை மொழிவதெனப் பின்னுகின்ற சொற்பேசி மெள்ளத் தலைகுனிந்தே மெல்லியலாள் நின்றிருந்தாள். “எங்கிருந்து இங்குவந்தாய்! என்ன குறை பெண்மணியே! சங்கிருந்த வெண்ணிறத்தாய்! சஞ்சலத்தால் வந்ததுண்டோ? இங்கிருந்து, உள்ளதை நீ என்னுடைய மக்களுடன் பங்கிருந்து கொள்வாய்நீ பயமொழிவாய்” என்று சொல்லி இங்கிதம்நான் சொன்னவுடன் இருதாளும் மண்டியிட்டு குன்றி உரைகுழறிக் குளிரால் நடுங்கினள்போல் சின்னஞ்சிறு குரலால் சிந்தைமிக நொந்தவளாய் “உன்னுடனே பிறந்தோன் ஊரைவிட்ட ஆரியனாம் முன்னம் உனைப்பிரிந்து மேல்நாடு மேவினவன் அன்னவன் புத்திரி நான் அத்தைநீர் சித்தம்” என்றாள். “நெஞ்சம் கலங்காதே நீயெதற்கும் அஞ்சாதே தஞ்சமுனக்கிருப்பேன் தையலே மெய்யிதுகாண் கொஞ்சம் இளவயதில் குறையுனக்கு வந்ததென்ன பஞ்சை யெனத்தனியே பட்டணத்தை விட்டுவந்தாய் வஞ்சிஇளங்கொடியே வந்துபசியாறுக” என்றேன். சற்றுத்தலை நிமிர்ந்தாள் தையலவள் புன்சிரிப்பு உற்றமுகத்தினோடு உள்ளம் குளிர்ந்தவள்போல் சுற்றி அயல்பார்த்துச் சொன்னபடி என்னுடனே முற்ற மதனைவிட்டு முன்கட்டில் வந்துநின்று தத்தியதன்மேல் நடக்கத் தயங்கினவள் போல நின்றாள். “தாவில்லை உள்ளே நீ தாராளமாய் வரலாம் வா”வென்று சொன்னவுடன் வல்லியவள் மெல்லவந்தாள், தூவெள்ளை யான அவள் துணியும், அணியிழந்தும் தாவள்யமான அந்தத் தையலவள் மெய்யழகில் ‘கோ’வென்று கூட்டமிட்டேன் குழந்தைமார்கூடி விட்டார். | | |
|
|