பக்கம் எண் :

தமிழன் இதயம்121

  
  “என்ன தடை இதற்கு எழுதுவாய்” என்று சொன்னேன்
சொன்னவுடன் என்றனுக்குத் தோன்றாதமொழிகளிலே
கன்னியவள் தன்னவர்க்குக் காகிதமும் போட்டுவிட்டாள்
பின்னைச் சிலநாளில் பெண்ணவளின் தன்னினத்தார்
அண்ணனென்றும் தம்பியென்றும் அக்கமென்றும் பக்கமென்றும்.

வந்தார் பலபேர்கள் வந்தவரைச் சொந்தமுடன்
தந்தேனிடமவர்க்கும் தக்கவிருந்துமிட்டேன்
சந்தேகம் நானவர்மேல் சற்றும் நினைக்காமல்
அந்தோ இருந்துவிட்டேன் அந்த ஒரு காரணத்தால்
நொந்தேன் நிலைதவறி நோவேன் விதியினையே.

அன்னவர்கள் கொண்டுவந்த அழகான பலபொருள்கள்
மின்னுகின்ற கண்ணாடி மினுக்குகின்ற பொம்மைகளும்
இன்னும் மயக்குகின்ற என்னனென்னவோ பொருள்கள்
என்னுடைய மக்களுக்கு எடுத்துக் கொடுத்தவளாய்க்
கன்னியவள் சிரிக்கக் களித்துவிட்டார் மக்களெல்லாம்.

நாளுக்கு நாளதன்மேல் நலிந்ததடி என்வீடு
மேலுக்கு மேலாக மிகவும் பயந்தவள்போல்
 ‘பாலுக்குங் காவலொடு பூனைக்கும் தோழன்’என்றே
தோல்நிற்க உள்ளிருந்த சுளைமறைத்த கொள்கையென
கோல்செய்த என்வாழ்வைக் குலைத்துவிட்டாள் மெல்லமெல்ல.

என்ன உரைத்தாளோ! ஏதுமருந்திட்டாளோ!
அன்னை தந்தை தெய்வமென்று ஆராதனை புரிந்த
என்னுடைய மக்களென்னை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை
சொன்னபடி கேட்பதில்லை  ‘தூ’வென்றும்  ‘போ’வென்றும்
கன்னியவள் மோகத்தால் காலால் எனை உதைப்பார்.

கொண்டசமயம் விட்டார் குலதெய்வப் பூசைவிட்டார்
பண்டைப் பெருமையுள்ள பக்திகளும் விட்டொழிந்தார்
கண்டபடி உண்டுடுத்துக் கண்டபடி யாய்க்களித்து
பெண்டொருத்தி தன்மயக்கில் பெற்ற என்னையும்இகழ்ந்து
சண்டையிட்டுத் திரிவார்நான் தவங்கிடந்த மக்களெல்லாம்.