பக்கம் எண் :

122நாமக்கல் கவிஞர்

  
காங்கிரஸ் பொன்விழா
 

கும்மி

  தேரல்ல கார்த்திகைத் தீபமல்ல-அந்தத்
தீபாவளியும் இன்றல்லவே
ஊரெல்லாம் என்ன வெளிச்சமென்பீர் இந்த
ஒப்பற்ற கொண்டாட்டம் ஏதுக்கென்பீர்.

காங்கிரஸ் என்றொரு சங்கமுண்டு-அது
காதிற்படாதவர் யாருமில்லை
ஈங்கதற் கைம்பது ஆண்டுகள் ஆனதில்
இந்திய மக்களின் கொண்டாட்டம்.

தங்கி இருக்க இடங்கொடுத் தோம்-அதைத்
தங்கள் இடமெனச் செய்துகொண்டார்
இங்கிருந் தேயவர் மெல்ல மெல்ல இந்த
இந்திய நாட்டை அடிமை கொண்டார்.

அந்த அடிமைத் தனம்போக நம்
அன்னையும் ஆட்சியும் மீட்சிபெற
இந்தத் தினம்வரை இந்தியர் மானத்தை
ஏந்தி உழைப்பது காங்கிரசே.

கெஞ்சிக் கெஞ்சிப்பல நாள்கேட்டும்-அதைக்
கேட்பவர் யாரும் இல்லாததனால்
அஞ்சிக்கை யாவையும் விட்டொழிய நமக்கு
ஆண்மை கொடுத்தது காங்கிரசே.

சத்தியம் என்ற கொடிபிடித்து-உயர்
சாந்தத் தியாகப் படைதொடுத்து
உத்தமர் காந்தி உரைப்படி காங்கிரஸ்
உலகம் வியந்திடும் போர் நடத்தி.