| கரையறியாக் காட்டாற்று வெள்ளம் போலக் கவிபொழிந்து வான்மீகி உலகுக் கீந்த திரையறியா ஓட்டத்தைத் தேக்கிக் கட்டித் திறமிகுந்த கால்வாய்கள் செய்து பாய்ச்சித் தரையறியா இலக்கியக்கா வனத்தைத் தந்தான் தனிப்புலமைக் கம்பனெனும் கவிதைத் தச்சன் உரையறியாப் பயனளிக்க உதவும் பாட்டை உலகமெலாம் அனுபவிக்க உழைப்போம் வாரீர். வனத்திலுள்ள மலர் வகைகள் எல்லாம் கொய்து வாசனைவேர் பச்சிலைகள், பலவும் சேர்த்து கனத்த ஒரு பூப்பொதியாம் ராமன் கதை வான்மீகி யெனும் தவசி கட்டோ டீந்தான் இனத்தையெலாம் ஆய்ந்தாய்ந்து இணைத்துக் கோத்து இடைக் கிடந்த மாசுமரு யாவும் நீக்கி தனித்தமணம் அறந்திகழும் மாலை யாக்கித் தரணிக்கே சூட்டி வைத்தான் கம்பன் தானே. மால்கடிந்த தவமுனிவான் மீகிஎன்பான் வானத்திடையே தான்கண்டு கொண்டு வந்த பால்படிந்து, முள்ளடர்ந்து, பருத்து நீண்டு, பரிமளிக்கும் பலவின்கனி பாருக் கீந்தான் மேல்படிந்த பிசினகற்றி, மெள்ளக் கீறி மெதுவாகச் சுளைஎடுத்துத் தேனும் வார்த்து நூல்படிந்த மனத்தவர்க்கு விருந்து வைத்தான் கம்பனென்ற தமிழ்த்தாயார் நோற்ற மைந்தன். அன்னியர்கள் தமிழ்மொழியை அறிந்தோர் பார்த்து அதிசயித்து ஆசைகொள்ளும் கவியாம்கம்பன் தன்னியிந்தத் தமிழுலகம் மறக்க லாமோ சரியாகப் போற்றாத தவறே போலும் | | |
|
|