பக்கம் எண் :

தமிழன் இதயம்125

  
  என்னவிதம் எங்கிருந்தான் என்றும் கூட
     ஏற்பதற்காம் சரித்திரங்கள் ஏனோ காணோம்
இன்னமும்நாம் இப்படியே இருக்கலாமோ?
     இழிவன்றோ தமிழரெனும் இனத்துக்கெல்லாம்.

நிதிபடைத்தோர் கலைவளர்க்கும் நெறியைக் காட்டி
     நீங்காத புகழினுக்கோர் நிலைய மாகி
மதிபடைத்த புலமையுள்ளோர் எவரும் வாழ்த்த
     மங்காத பெருவாழ்வு தமிழுக் கீந்து
துதிபடைத்த ராமகதை தோன்றச் செய்த
     சோழவள வெண்ணெய் நல்லூர்ச் சடையன் சேரும்
கதிபடைத்த சொல்வலவன் கம்பன் பேரும்
     கடல்கடந்த நாடெல்லாம் பரவக் காண்போம்.

கம்பனுக்கோர் பெருநிலையம் காண வேண்டும்
     கவிதைகளை ஆதரிக்கும் கழகம் வேண்டும்
தம்பழைய பெருமைகளை மறந்த மக்கள்
     தலைநிமிர முடியாது தரணி தன்னில்
வம்பளந்து வீண்கதைகள் பேசிப் பேசி
     வாழ்வின் எல்லாத் துறைகளிலும் வறிய ரானோம்
நம்பி மனத் தெளிவுடனே கடமை ஆற்றி
     நமதுமொழிக் கலைவளர்த்து நன்றே வாழ்வோம்.
 
 
கம்பன்
 
  எண்ணி எண்ணித் திட்டம்போட் டெழுதி னானோ!
     எண்ணாமல் எங்கிருந்தோ கொட்டினானோ!
புண்ணியத்தால் உடன்பிறந்த புலமை தானோ!
     போந்த பின்பு ஆய்ந்தறிந்து புகன்ற தாமோ?