| தண்ணியல் சேர் தமிழணங்கின் தவமே தானோ! தயரதனும் சனகனுமே தரித்த நோன்போ விண்ணமுதின் சுவைகெடுத்த கம்பன் பாடல் விரிந்தவிதம் என்றென்றும் வியப்பே ஆகும். சாதிமத விலங்கினம் வாழ் நாட்டை மாற்றி சமனாக்கிச் சமரசமா தளத்தின் மேலே நீதிநெறி கருணையெனும் நிலைகள் நாட்டி நித்தியமாம் சத்தியத்தின் சிகரம் நீட்டிக் காதல்அறம் வீரம் எனும் கொடியைத் தூக்கிக் கம்பனென்பான் கட்டிவைத்த கனக மாடம் ஆதிமுதற் பரம்பொருளின் சக்தி யாகும் அன்னையெங்கள் தமிழ்த்தெய்வம் அமரும் கோயில். ஏழையென்றும் செல்வரென்றும் பேதம் எண்ணார் எல்லாரும் எச்சுகமும் எளிதே பெற்றுக் கோழையென்ற குடிசனங்கள் எவரும் இன்றிக் கொடுங்கோலும் கடுங்காவல் இல்லா நாட்டில் வாழுதற்கு வேண்டும் எல்லா வளமும் தாங்கி வந்தபகை நொந்துவிழும் பொறிகள் வைத்து ஆழியுடன் தமிழ்த்தாயர் அரசு காக்கும் அற்புதமாம் கோட்டையன்றோ கம்பன் காட்சி. வேந்தருக்கும் குடிகளுக்கும் பொருத்தம் சொல்லி வேற்றரசர் படையெடுக்கா வீரம்கூறி தேர்ந்த பல கலையறிவின் இன்பம் தேக்கித் தெய்வபக்தி நட்பிவற்றின் திறமும் சேர்த்துக் காந்தனுக்கும் காதலிக்கும் கற்பைக் காட்டிக் கட்டாயப் படுத்தாமல் கடமை பேசிச் சாந்தமுள்ள சமுதாய அமைப்புக் காகும் சாத்திரமாம் கம்பனென்பான் தந்த பாட்டு. | | |
|
|