பக்கம் எண் :

தமிழன் இதயம்127

  
  கம்பனென்ற பெரும்பெயரை நினைக்கும் போதே
     கவிதையென்ற கன்னிகைதான் வருவாள் அங்கே
அம்புவியில் கண்டறியா அழகி னோடும்
     அமரருக்கும் தெரியாத அன்பினோடும்
இன்பமென்று சொல்லுகின்ற எல்லாம் ஏந்தி
     இன்னிசையும் நன்னயமும் இணைத்துக் காட்டித்
துன்பமென்ற மனத்துயரைத் துடைத்து விட்டுத்
     தூங்காமல் தூங்குகின்ற சுகத்தை ஊட்டும்.
 

தமிழ்இசை
 
  தன்நாட்டுத் தாய்மொழியில் எவரும் கேட்கத்
     தமிழ்நாட்டில் தமிழ்ப் பாட்டு வேண்டு மென்ற
நன்னாட்டத் துடன்ராஜா நம்சர்:அண்ணா
     மலையவர்கள் அதற்காகப் பரிசு நாட்டத்
தென்நாட்டுச் சிதம்பரத்தில் அறிஞர் கூடித்
     தமிழ்மொழிக்குத் தேவையென்று தீர்மானித்தால்
எந்நாட்டு யாராரோ எங்கோ கூடி
     ஏசுவதும் பேசுவதும் என்ன விந்தை!

வந்தஎந்தப் பிறமொழிக்கும் வரவு கூறி
     வகைசெய்து வாழ்வளித்து வரிசை யெல்லாம்
தந்தவர்கள் தமிழரைப் போல் வேறு யாரும்
     தரணியில் இணை சொல்லத் தகுவாருண்டோ?
அந்தப் பெருங் குணத்திலின்னும் குறைவோமில்லை;
     ஆனாலும் தமிழினங்கள் வாழ வேண்டின்
சொந்த மொழிக் கலைகளெல்லாம் சுருங்கித் தேயப்
     பார்த்திருந்தும் சோம்புவது அறிவோ சொல்வீர்.