பக்கம் எண் :

தமிழன் இதயம்129

  
  சிங்கார வாதங்கள் பலவும் பேசிச்
     சிறப்பான முயற்சியிதைச் சிதைக்கலாமோ?
தங்காமல் தயங்காமல் தளர்ந்தி டாமல்
     தமிழ்நாட்டார் இச்செயலைத் தாங்க வேண்டும்.

கேட்டவர்கள் பாடினவர் எல்லாம் சேர்ந்து
     கெடுத்துவிட்ட காரியத்தைக் கிண்டிக் கிண்டி
நாட்டினிலின்னும் இதற்குமொரு சண்டை யின்றி
     நல்லஒரு தமிழ்ப்பண்ணை நடத்த வேண்டும்;
பாட்டினோ டிலக்கியமும் படியப் பாடிப்
     பருந்தோடு நிழல்செல்லும் பான்மை காப்போம்;
கூட்டமிட்டுப் பேசிவிட்டு மறந்திடாமல்
     குற்றமிதைத் தமிழ்நாட்டிற் குறைக்கவேண்டும்;

பலநாட்டுச் சங்கீதம் நமக்கு வேண்டும்,
     பற்பலவாம் முறைகளையும் பழக வேண்டும்,
விலைகூட்டிக் கலையறிவை வாங்கி யேனும்
     விதம்வி தமாய்த் தமிழ்மொழியில் விரிக்க வேண்டும்
அலைநீட்டும் கடல் கடந்த அறிவானாலும்
     அத்தனையும் தமிழ்வழியில் ஆக்கவேண்டும்
நிலைநாட்டித் தமிழ்க்கலைகள் வளர்ச்சிக்கென்றே
     நிச்சயமாய் உழைக்க ஒரு நிலையம் வேண்டும்.

ஆதலால் தமிழ்நாட்டில் தமிழ்ப் பாட்டிற்கே.
     ஆதரவு அகத்தியமாய்அதிகம் வேண்டும்;
காதலால் தாய்மொழியைக் காப்பதன்றிக்
     கடுகளவும் பிறமொழிமேற் கடுப்ப தன்று;
தீதிலா திம்முயற்சி சிறப்புற்றோங்கத்
     திருவருளைத் தினந்தினமும் தொழுது வாழ்த்தி
வாதெல்லாம் விலக்கிக் கலைவாண ரெல்லாம்
     வல்லநல்ல தமிழ்பாடி வரவேண்டும்.