| தாயை மறந்திருக்கும் குழந்தைகள் ஸகஜந்தான்; சேயை மறந்தவளைச் செகமின்னுங் கண்டதில்லை. நீயே எமைமறந்தால் நிலையெமக்கது வேறே நோயேமிகமலிய நொந்தனம், வந்தருள்க நித்தம் உனைநினைந்து நியமமுடன் வசிக்க சுத்தமனநிலையும் சொல்லும் செயலும் தந்து சுற்றும் பலபிணிகள் தொடரா தருள்புரிவாய் சத்தியமாய் விளங்கும் தேவி பராசக்தி! | | மக்கட் செல்வம் | | பெற்றிடும் செல்வத் தெல்லாம் பெரியது மக்கட் செல்வம் உற்றிடும் இன்பத் தெல்லாம் உயர்ந்தது மக்க ளின்பம் மற்றிதை உலகி லெந்த மனிதனும் மறுக்கொ ணாது சற்றதை மதித்து நாமும் சரிவர நடப்போ மாக. சிறந்திடும் இன்ப மான சிசுவது நமக்கு வந்து பிறந்திடு முன்னும் பின்னும் நாம்செய்யும் பிழைக ளாலே அருந்தவக் குழந்தை இன்பம் அனுபவிப் தற்கு முன்னால் இறந்திடும் அதனைப் போல இன்னொரு துன்பமுண்டோ? உருவினிற் குறைந்த தென்றும் உடல்மிக மெலிந்த தென்றும் அறிவினிற் குறைந்த தென்றும் அழகினை யிழந்த தென்றும் பிறவியின் குறைக ளெல்லாம் பெற்றவர் குற்றத்தாலே கருவினில் அமைந்த தல்லாற் கடவுளின் குற்ற முண்டோ? விதிவிலக் கறிந்து வாழ்ந்து விமலனை மனத்து ளெண்ணி மதியினைக் கொண்டு சுத்த மார்க்கத்தில் நின்று நாமும், புதல்வரைப் பெற்று மற்றும் புத்தியாய் வளர்ப்போமானால் இதமுற வந்த மக்கள் இளமையில் இறப்பதுண்டோ? | | |
|
|