பக்கம் எண் :

தமிழன் இதயம்25

  
  கன்றினுக்குத் தாய்போல உயிர்கட்காகக்
     கரைந்துருகும் காந்தியைநாம் நேரிற் கண்டோம்
இன்றுலகின் துயர்நீங்கச் சிறந்த மார்க்கம்
     எடுத்துரைக்கக் கொடுத்து வைத்தோம் இருந்து கேட்க.

கவிராஜர் கற்பனைக்கும் எட்டாத் தீரம்
     கடலென்றாற் குறைவாகும் கருணை வெள்ளம்
புவிராஜர் தலைவணங்கும் புனித வாழ்க்கை
     பொறுமை யெனும் பெருமைக்குப் போற்றும்தெய்வம்
தவராஜ யோகியர்கள் தேடும் சாந்தி
     தளர்வாகும் எழுபத்து ஏழாம் ஆண்டில்
யுவராஜ வாலிபர்க்கும் இல்லா ஊக்கம்
     ஒப்பரிய காந்தியரால் உலகம் வாழ்க!
 
 

சாந்தியே காந்தி
 

பல்லவி

  சாந்தியின் விரிவுரை காந்தியின் சரித்திரம்
தமிழா மறக்காதே.
 
 

அனுபல்லவி

  தேர்ந்தவர் ஞானமும் தெளிந்தவர் மோனமும்
செந்தமிழ் நூல்களெல்லாம் சந்ததம் கோருகின்ற
 

(சாந்தி)
 

சரணங்கள்

  நாட்டைத் துறந்தவரும் வீட்டை மறந்தவரும்
நானாவிதம்பல தானம் புரிந்தவரும்
ஏட்டைத் தினம்புரட்டி எண்ணிப் படிப்பவரும்
எல்லாவிதத்திலும் நல்லோர் விழைந்திடும்
(சாந்தி)