பக்கம் எண் :

தமிழன் இதயம்27

  
  அடிபட்டு மாளவும் சிறைபட்டு வாழவும்
அச்சமகற்றினதார்? -உண்மை
குடிகொண்ட கோபத்தைக் குறைவற நீக்கிய
குணமுயர் காந்தியவர்.

பேதையரென்று நாம் பேசிய பெண்களும்
வீதியில் நம்மிலுமே -இந்த
நீதியில்லா முறை அரசை எதிர்த்துடன்
நின்றிடக் காந்தி செய்தார்.

சின்னஞ்சிறிய குழந்தைகளும் இன்று
ஜயஜய வென்றுசொல்லி -எங்கும்
கல்நெஞ்சுருகிடத் தேசத்தினைத்தொழ
காந்திஜி செய்துவிட்டார்.

தீண்டப்படாதென்று மனிதரைச் சொல்வது
தீமையில் தீமையென்றே -அதைப்
பூண்டொடும் போக்கநாம் விரதம்புனைந்தது
புண்ணியர் காந்தியினால்.

தன்னை வதைப்பவர் தங்களுக்கும் அன்பைத்
தாங்குவதே தவமாம் -என்று
முன்னை இந்நாட்டினில் சொன்னவர் சொற்களை
முற்று வித்தார் காந்தி.

உடலினும் உயிரினும் உள்ளிருக்கும் ஒன்று
உயர்ந்தது காணும் என்றே -இந்தக்
கடலுலகத்தினில் கண்ணுக்கு முன்னாக
காட்டிவிட்டார் காந்தி.

காந்தியெனும் பெயர் சாந்தம் என்னும் சொல்லின்
காட்சியின் சாட்சியென்றே -இனி
மாந்தர்கள் எங்குமே ஏந்தி அதன்வழி
மங்களம் எய்திடுவார்.