| உத்தமன் காந்தி | | | உள்ளம் உருகுது கள்ளம் கருகுது உத்தமன் காந்தியை நினைந்து விட்டால் வெள்ளம் பெருகிடக் கண்ணீர் வருகுது வேர்க்குது இன்பம் தேக்குதடா . . . சித்தம் குளிர்ந்துள பித்தம் தெளிந்திடும் சீரியன் காந்தியின் பேர் சொன்னால் புத்தம் புதியன முற்றும் இனியன பொங்கிடும் உணர்ச்சிகள் எங்கிருந்தோ . . . கிளர்ச்சிகொண் டான்மா பளிச்சென மின்னுது கிழவன் காந்தியின் பழமை சொன்னால் தளர்ச்சிகள் நீங்கிய வளர்ச்சியில் ஓங்கிய தாட்டிகம் உடலில் கூட்டுதடா. . . சோற்றையும் வெறுக்குது காற்றையும் மறக்குது சுத்தன்அக் காந்தியின் சக்தி சொன்னால் கூற்றையும் வெருட்டிடும் ஆற்றலைத் திரட்டிடக் கூடுதடா மனம் தேடுதடா தூக்கமும் கலைந்தது ஏக்கமும் குலைந்தது துன்பக் கனவுகள் தொலைந்ததடா வாழ்க்கையும் திருந்திட நோக்கமும் விரிந்தது வள்ளலக் காந்தியின் நினைப்பாலே . . . வஞ்சனை நடுங்கிடும் வெஞ்சினம் அடங்கிடும் வாய்மையன் காந்தியின் தூய்மை சொன்னால் அஞ்சின மனிதரும் கெஞ்சுதல் இனியில்லை ஆண்மையும் அன்பும் அருளுமடா . . . |
| |
|
|