பக்கம் எண் :

தமிழன் இதயம்29

  
  ஜீவர்கள் உலகுள யாவரும் சமமென
     செய்கையில் காட்டிய காந்தியடா
பாவமும் பழிகளும் தீவினை வழிகளும்
     பதுங்குமடா கண்டு ஒதுங்குமடா . . .

எழுபதும் ஐந்தும் குழகுழ வயசினில்
     என்னே! காந்தியின் இளமையடா!
முழுவதும் அதிசயப் பழுதறு வாழ்கையின்
     முத்தனடா பெரும் சத்தனடா . . .

காந்தியின் தவக்கனல் சூழ்ந்தது உலகினைக்
     காம தகனமென எரிக்குதுபார்
தீய்ந்தன சூதுகள் ஓய்ந்தன வாதுகள்
     திக்குத் திசையெல்லாம் திகைத்திடவே . . .

ஏழைகள் எளியரின் தோழன் அக் காந்தியை
     எப்படிப் புகழினும் போதாதே
வாழிய அவன்பெயர் ஊழியின் காலமும்
     வையகம் முழுவதும் வாழ்ந்திடவே.
 
 
காந்தி வழி பழசா?
 
  சாந்தவழி சத்தியத்தில் சலித்தாய் நெஞ்சே!
     சன் மார்க்கப் பழக்கமில்லாச் சகவா சத்தால்
காந்திவழி பழசாகப் போன தென்று
     கதிமாற மதிமாறிக் கருதுகின்றாய்;
மாந்தருக்குள் காந்தியைப்போல் புதுமை வாழ்க்கை
     மற்றொருவர் நடத்தின தார்? மனமே சொல்வாய்
ஆய்ந்தறிந்த அவன் தொடர்பை இகழ்வாயானால்
     யாரும்இனி மீட்கவொண்ணா அடிமையே நீ.