| வேறுபல துன்பவழி எல்லாம் விட்டு வெகுபுதிய காந்திவழி விரும்பிக் கொண்டாய் வேறுபட்ட உலகநடை மீட்டும் சேர்ந்து செய்த அருந் தவப்பயனைச் சிதறுகின்றாய். கலகமெல்லாம் கைகோத்துக் களிகூத்தாடக் கரடிபுலி சிங்கமென மனிதர்சீற அலகைபற்றி ஆடுதல்போல் அகிலம் அஞ்ச அடிதடியும் கொலைகளவும் அறம்போல் ஓங்க உலகமெல்லாம் காந்தியையே உற்றுப் பார்த்து உய்வதற்கோர் புதியவழி உரைத்தானென்று பலகலையின் அறிஞரெல்லாம் புகழப் பார்த்தும் பரிகசித்தாய் நீ அவனைப் பாவி நெஞ்சே! அச்சமிக்க இருட்டறையில் அடைபட் டங்கே அழுவதற்கும் ஜீவனற்றுக் கிடந்த உன்னை மிச்சமுள்ள மூச்சுமற்றுப் போகு முன்னால் மீட்டணைத்து மேனிசெய்து விட்டான் காந்தி! இச்சகத்தில் அறிவறிந்தோர் என்றும் வாழ்த்தும் இன்பமிகும் காந்திவழி பழசா மென்றால் பச்சையிளங் காய்புதிய தென்றுகொண்டு பழுத்தபழம் பழசென்னும் பான்மையாகும். | | |
|
|