பக்கம் எண் :

தமிழன் இதயம்35

  
  தன்னுயிரை மன்னுயிர்க்கே தத்தம் செய்து
     தருமநெறி தவறாத தன்மைக் காக
இன்னுயிர்கள் மனங்குளிர்ந்து இளங்கோ என்று
     எதிர்கொள்ளும் மன்னனெங்கள் ஜவஹர் லாலே.

பணம்படைத்த சிலபேர்கள் தனியே கூடிப்
     பட்டாளம் சுற்றி நின்று பாரா செய்ய
மணம்படைத்தாம் வரவளிக்க மகிழ்ந்து போகும்
     மன்னரென்பார் எத்தனையோ பேர்கள் உண்டு
குணம்படைத்துக் கருணை மிகும் கொள்கைக் காகக்
     கோடானு கோடிமக்கள் எங்கும் கூடி
 ‘கணம்பொறுங்கள் கண்டாலும் போதும்’ என்று
     களிசிறக்கும் மன்னனெங்கள் ஜவஹர் லாலே.

எச்சிலுண்ணும் சிறுமனத்தார் பலபேர் கூடி
     இல்லாத பெருமைகளை இசைத்துக் கூறும்
இச்சகத்தால் மதிமயங்கி இறுமாப் புற்ற
     இருள்மனத்தார் எத்தனையோ அரசர் கண்டோம்
மெச்சுகின்ற பிறர்மொழியை மிகைசெய் யாமல்
     மெய்யறிவும் பொய்வெறுப்பும் துணையாய் மேவ
அச்சமற்ற நல்லொழுக்கம் அதற்கே மக்கள்
     ஆசைசெய்யும் அரசெனங்கள் ஜவஹர் லாலே.

சேனைகளை முன்செலுத்திப் பின்னாள் நின்று
     ஜெயித்துவிட்டேன் என்று சொல்லிச் செருக்கிலாழும்
ஊனமுள்ள பெருமையினால் அரச ரென்போர்
     உலகத்தில் எத்தனையோ பேரைக் கண்டோம்
தீனர்களின் துயர்துடைக்க முன்னால் நின்று
     தீரமுடன் பிறர்க்குழைக்கும் சிறப்புக் காக
மானமிகும் வீரனென எவரும் வாழ்த்த
     மன்னனென விளங்கிடுவான் ஜவஹர் லாலே.