திலகர் | (திலகர் இறந்த சேதியைக் கேட்ட தினம் பாடியவை) | | இடியது விழுந்ததோ தான் இரும்பினைப்பழுக்கக்காய்ச்சி இருசெவி நுழைத்ததோ தான், தடியது கொண்டே எங்கள் தலையினில் அடித்ததோதான் தைரியம் பறந்ததோதான் கொடியது சாய்ந்ததோதான் கொடுவிஷம் உச்சிக்கேறிக் குறைந்திடுங் கொள்கைதானோ, திடமுளதீரவீரன் திலகனார் மாண்டாரென்ற தீயசொற் கேட்டபோது! ‘என்னுடைய பிறப்புரிமை சுயராஜ்யம்’ என்னுமொரு மந்திரத்தை எங்கட்கீந்த மன்னவனே திலகமுனி மஹா ராஜா! எம்முடைய மராட்டியர் தம் மடங்கலேறே! உன்னுடைய பெருஞ்சேனை யுத்தத்திலணிவகுத்து உத்தரவை எதிர்பார்த்து இன்னவழி போவதெனத் தெரியாமல் திகைக்கின்ற இச்சமயம் இறக்கலாமோ! அன்னியர்கள் தொட்டிழுக்க அவமானம் நேர்ந்ததென அழுது நின்றாள் அன்னைஉன்றன் பாரதத்தாய் அவள்மானம் காப்பதற்கே அவதரித்தாய்; சின்ன உன்றன் வயதுமுதல் இதுகாறும் அப்பிடியைத் தளர்த்து விட்டாய் இன்னுமவள் சிறைநீங்கி வருவதற்குள்எம்மைவிட்டு ஏகினாயே! | | |
|
|