| பகையென நினைத்த பேரும் பக்தியோ டஞ்சி நிற்பார், மிகையெனச் சொல்லு வோரும் மெய்சிலிர்த் திடுவர் கண்டால் நகைமுகங் கண்ட போதும் நடுங்குவார் வெள்ளைக் காரர் தகையிவன் பிரிந்து போகத் தரிக்குமோ இந்த நாடு? வசைகூறி உனையிகழ்ந்த வாலண்டைன் சிர்ரலெனும் வகையிலோனை வழிகூற அவன் மேலே நீதொடுத்த வழக்கிற்பல வஞ்சமாற்றி, அசைகூறி ஆங்கிலர்கள் அவன்பக்கம் தீர்ப்புச் சொன்ன அவதி நோக்கி அங்கவர்கள் நீதிகளில் வைத்திருந்த நம்பிக்கை அறவேநீங்கி இசைகூர உலகமெலாம் இருந்தாளும் பெருங்கடவுள் இருமன்றத்தில் எடுத்துரைப்போம் இக்குறையும் இந்தியர்கள் பலகுறையும் என்று சொல்லி, பசைகூறித் தேவரிடம் பண்ணினையோ விண்ணப்பம் பரிவுகூறி பாங்குடனே அவர்விடுத்த ஓலைக்குப் பதிலுரைக்கப் போயினாயோ! நிலையழிந்து பரிதவிக்கும் நீபிறந்த இந்நாட்டின் நிலைமை நோக்கி, நீபட்ட கொடுந்துயரம் இன்னொருவர் படுவரென நினைக்கப்போமோ, | |
|
|