பக்கம் எண் :

தமிழன் இதயம்45

  
  கொழுந்தோடிப் படர்கலையின் குளிர்ஞானக்
     குன்றே! ஓர் குன்றினின்றும்
ஒழிந்தோடி மறைந்தனயே! உடன்போந்த
     சிறுவர்களின் உணர்சி ஓட

தேனாட்டும் தென்மொழியும் தெருளூட்டும்
     வடமொழியும் தெளியத் தேர்ந்து
மேனாட்டுப் பலமொழியும் மிகக்கூட்டிக்
     கடைந்தெழுந்த அறிவை யெல்லாம்
தாய்நாட்டின் விடுதலைக்கே தனிநாட்டித்
     தவம்புரிந்த தகைமையாளா!
வானாட்டிற்சிறந்ததென்பாய் தமிழ்நாட்டை
     விட்டு நீபோய் வாழ்வ தெங்கே?

ஐயரெனில் அந்தணராய் அனைத்துயிர்க்கும்
     செந்தண்மை அருள்வோர் என்று
செய்யதிரு வள்ளுவனார் செய்தமொழித்
     திருக்குறளின் சீலனாகி
மெய்யறிவைப் பெறநாடி மெய்வருத்திப்
     பொய்வெறுத்த மேன்மை யாலோ!
 ‘ஐயர்’ என்று தனியுரைத்தால் உன்னையன்றித்
     தமிழுலகம் அறியா தையா,

முழுமதி முகிழ்த்தா லன்ன முகந்திகழ் கருணைநோக்கும்
     மூர்க்கரும் நேரிற்கண்டால் முகந்திடும் சாந்த வீச்சும்
குழலினும் இனியதான குழந்தையின் மழலைப் பேச்சும்
     குவிந்திடும் உதட்டிற் கூடக் கூத்திடும் சிரிப்பின் கூட்டும்
தழலினும் தூய வாழ்வும் தாயினும் பெரிய அன்பும்
     சத்திய நிலையும் முன்னாள் தவமுனி இவனே என்னப்
பழகிய பேயும் போற்றும் படித்தொரு வடிவம் தன்னை
     பாரிடை இனிமேல் வேறுயாரிடைப் பார்ப்போம் ஐயா!