| கரைசெய முடிந்திடாத கவலையால் கண்ணீர் பொங்க உரைசொலி அடிமைக் கட்டை உடைத்திடத் துடித்தோன் தாகூர். ‘ஒத்துழை யாமை’ என்று காந்தியார் உரைக்கும் முன்னால் இத்துரைத் தனத்தா ரோடு இணங்கிடப் பிணங்கி விட்டேன் பற்றுகள் அவர்முன் தந்த பட்டமும் பரிசும் வீசிச் சுத்தியை முதலிற் செய்த சுதந்தர தீரன் தாகூர். காந்தியும் ‘குருதேவ்’ என்று கைகுவித் திறைஞ்சும் தாகூர் மாந்தருள் பலநாட்டாரும் மதங்களும் மருவி வாழ்ந்து தேர்ந்தநல் லறிவை அன்பை செகமெலாம் பரப்ப வென்றே ‘சாந்திநி கேதன்’ என்ற சமரசச் சங்கம் தந்தோன். கலைகளின் வழியே தெய்வக் கருணையைக் காண்ப தென்னும் நிலையினைப் படிக்க வென்றும் நிருவிய நிலையம் ஈதாம் சிலைதரல் ஆடல்பாடல் சித்திரம் நடிப்ப ரங்கம் பலவித வித்தை எல்லாம் பயிலுதற் கிடமாய் நிற்கும். | |
|
|