பக்கம் எண் :

48நாமக்கல் கவிஞர்

  
  தாய்மொழிப் பற்றும் தங்கள்
     கலைகளைத் தாங்கி நிற்கும்
ஆய்மையும் வங்காளிக்கு
     அதிகமாம் அதனால் எல்லாச்
சீமையும் தாகூர் பாட்டைச்
     சிறப்புறப் பரப்பினார்கள்
வாய்மையைத் தமிழர் போற்றி
     வளர்ப்பரோ தமிழன் மாண்பை.
 
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
 
  தேசிக விநாயகத்தின் கவிப்பெருமை
    தினமும் கேட்பதுஎன் செவிப்பெருமை
ஆசிய ஜோதியெனும் புத்தர்போதம்
    அழகு தமிழில் சொன்னான் அதுபோதும்.

கோழி குலவிவரும் கிளிகொஞ்சும்
    குழந்தை எழுந்துதுள்ளிக் களிமிஞ்சும்
ஏழை எளியவர்கள் யாவருக்கும்
    இன்பம் கொடுக்க அவன் பாவிருக்கும்.

உழுது தொழில் புரியும் பாட்டாளி
    உழைப்பில் ஓய்வுதரும் பாட்டாகும்
தொழுது அடிமைபடும் துயரமெல்லாம்
    தூரத் தள்ளமனம் உயருமடா.

படித்துப் பழகாத பாமரருக்கும்
    பாடிப் பருகஅதில் சேம மிருக்கும்
ஒடித்துப் பொருள்பிரிக்கும் சந்திகளில்லை;
    ஊன்றிப் பதம்கூட்டும் பந்தனமில்லை.