| சுதேசிக் கப்பல்விட்ட துணிகரத்தான்-அதில் துன்பம் பலசகித்த அணிமனத்தான் விதேச மோகமெல்லாம் விட்டவனாம்-இங்கே வீரசு தந்தரத்தை நட்டவனாம். | |
| நாட்டின் சுதந்தரமே குறியாக-அதை நாடி உழைப்பதுமே வெறியாக வாட்டும் அடக்குமுறை வருந்துயரை-வெல்ல வாழும் சிதம்பரத்தின் பெரும்பெயராம் | (சிதம்) |
சிதம்பரம் பிள்ளை நினைவு |
| மடமையதோ பிறநாட்டார் மயக்கந் தானோ மக்களெல்லாம் சுதந்தரத்தை மறந்தாராகி அடிமை இருள் நள்ளிரவாய் அனைத்தும் மூடி யாரும்தலை நீட்டவொண்ணா அந்தநாளில் திடமனத்துச் சிதம்பரப்பேர் பிள்ளையாவார் செய்திருக்கும் அச்சமற்ற சேவை சொன்னால் உடல் சிலிர்க்கும் உயிர்நிமிர்ந்து உணர்ச்சிபொங்கும் உள்ளமெல்லாம் நெக்கு நெக்காய் உருகுமன்றோ. | |
| எல்லாரும் தேசபக்தர் இந்தநாளில் எத்தனையோ சிறைவாசம் இனிதாய்க் காண்பார் சொல்லாலும் எழுத்தாலும் விளக்க வொண்ணாத் துன்பமெல்லாம் சிறைவாசம் அந்தநாளில் வல்லாளர் சிதம்பரனார் சிறையிற் பட்ட வருத்தமெல்லாம் விரித்துரைத்தால் வாய்விட்டேங்கி கல்லான மனத்தவரும் கண்ணீர் கொட்டி கனல்பட்ட வெண்ணெயெனக் கரைவார் இன்றும். | |