| சாதிகுலச் சமயமெல்லாம் கடந்த தக்கோர் சமரசமும் சன்மார்க்கம் தழுவும் சான்றோர் நீதிநெறி மிகப்பயின்ற பலபேர் சேர்ந்து நிறுவியநம் காங்கிரசை நிதமும் போற்றி பேதமுற்றுப் பிணங்கிவிட நேர்ந்த போதும் பெரியசபை அதை இகழ்ந்து பேசாநேசன் ஓதி அதன் வளர்ச்சியையே விரும்பி வாழ்த்தி உள்ளளவும் சிதம்பரந்தான் உவப்பான் உள்ளம். | |
| பேசிவிட்டே சுயராஜ்யம் பெறலாம் என்று பெரியபல தீர்மானக் கோவை செய்து காசுபணப் பெருமையினால் தலைவ ராகி காங்கிரசை நடத்தியதைக் கண்டு நொந்து தேசநலம் த்யாகமின்றி வருமோ என்று திலகர்பிரான் செய்தபெரும் கிளர்ச்சி சேர்ந்து ஓசைபடா துழைத்தசில பெரியோர் தம்முள் உண்மைமிக்க சிதம்பரனார் ஒருவராவார். | |
| உழுதுபல தொழில் செய்து உழைப்போ ரெல்லாம் உணவும்உடை வீடின்றி உருகி வாட பழுதுமிக அன்னியர்க்குத் தரக ராகிப் பசப்புகின்ற வீணருக்கோ சுகங்கள்! என்று அழுதுருகித் தொழிலாளர் இயக்கம் கண்டு அந்நாளில் சிதம்பரனார் நட்ட வித்தாம் விழுதுபல விட்டுபெரும் மரமாய் இன்று வெவ்வேறு கிளைகளுடன் விளங்கக் காண்போம். | |
| கள்ளமற்றுக் கலகலத்த பேச்சுக்கேட்கும் கறுப்பெனினும் சிரிப்புமுகம் கருணை காட்டும் குள்ளமென்னும் ஓர் உருவம் இருகை கூப்பிக் குன்றெடுத்துக் கடைந்ததெனக் குலுங்க நிற்கும் | |