| நிச்சயமெம் தாய்நாட்டின் அடிமை வாழ்வை நீக்காமல் விடுவதில்லை எனமுன் வந்து துச்சமெனச் சுகத்தையெல்லாம் துறந்து நிற்கத் தூண்டியது பாரதியின் சொல்லே யாகும். | |
| படித்தறியா மிகஏழைக் கிழவ னேனும் பாரதியின் பாட்டிசைக்கக் கேட்பானாகில் துடித்தெழுந்து தன்மெலிந்த தோளைக்கொட்டித் தொளைமிகுந்த கந்தலுடைச் சுருக்கிக் கட்டி எடுத்தெறிய வேணுமிந்த அடிமை வாழ்வை இப்பொழுதே இக்கணமே என்றென் றார்த்து அடித்துரைத்து ஆவேசம் கொள்வா னென்றால் அப்பாட்டின் பெருமைசொல ஆரே வல்லார். | |
| புத்தொளியிற் பழந்தமிழ்க்கோர் புதுமை பூட்டிப் புத்துயிரும் புதுமணமும் புகுத்தி ஞானச் சக்தியொளி மிகவிளங்கும் சொற்க ளாலே தாய்நாட்டின் தளையறுக்கும் தவமே பாடி எத்திசையும் இளந்தமிழர் இன்று கூடி இறந்தேனும் ஈன்றவளை மீட்போ மென்று பக்தியோடு அறப்போரில் முனைந்து நிற்கப் பண்ணினது பாரதியின் பாட்டேயாகும். | |
| எத்தாலும் பணந்தேடி இன்பம் நாடி உண்டுடுத்து இறப்பதனை இகழந்து தள்ளிப் பித்தாகித் தான் பிறந்த பரத நாட்டின் பிணிவீட்டல் ஒன்றனுக்கே பாடிப் பாடி முத்தாதி மணிகளென்னும் சொற்க ளோடு முப்பழத்தின் சுவைகூட்டி முனிவி லாது சத்தான வீரத்தின் சாறும் சேர்த்துக் கவிசமைத்த பாரதியின் தகைமை என்னே! | |