| புண்ணியப் புகழொன் றில்லாப் பொற்பொதி யுடையார் போலும் திண்ணிய சுதந்தரத்தின் தெரிசனம் இல்லா வாழ்க்கை. | |
| உண்டிகள் பலவும் செய்து உப்பிலா துண்ணல் போலும் கண்டொரு இனிமை சொல்லக் கனவிலான் விருந்து போலும் பெண்டிருள் அழகு மிக்காள் பிரியமில் லாமை யொக்கும் தொண்டுசெய் துரிமை யின்றிச் சுகித்துடல் வளர்க்கும் வாழ்க்கை. | |
| அன்பறம் வளர்ந்தி டாது ஆற்றலும் அறிவும் குன்றும், வம்புகள் சூதும்வாதும் வழக்குகள் வளரும் வாழ்வின் இன்பமும் ஊக்கம் ஆன்ம எழுச்சியும் இன்றி என்றும் துன்பமும் சோம்பல் சூழும் சுதந்தரம் இல்லா நாட்டில். | |
| கல்வியும் கலைகள் யாவும் களைமிகும் பயிர்க ளாகும் செல்வமும் புகழும் தேயும் செருக்கவர் தருக்கி வாழ நல்லவர் வருந்தி வாட நடுநிலை ஞாயம் கெட்டுத் தொல்லைகள் கட்சி கட்டும் சுதந்தரம் இழந்த நாட்டில். | |